ஏன் அதிமுக எம்.பிக்களை பிரதமர் பார்க்கலை.. தம்பித்துரையின் "தத்தக்கா புத்தக்கா" பதில்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கோரிக்கை மனுவுடன் வந்த அதிமுக எம்.பிக்கள் குழுவை ஏன் பிரதமர் பார்க்கவில்லை என்ற கேள்விக்கு லோக்சபா துணை சபாநாயகர் தம்பித்துரை மழுப்பலாக விளக்கம் அளித்தார்.

ஜல்லிக்கட்டு தொடர்பான கோரிக்கை மனுவுடன் இன்று டெல்லியில் பிரதமர் அலுவலகத்திற்கு அதிமுக எம்.பிக்கள் மொத்தமாக திரண்டு வந்திருந்தனர். ஆனால் அத்தனை பேர் திரண்டு வந்தும் கூட பிரதமர் அவர்களை சந்திக்கவில்லை. பிரதமர் அலுவலக செயலாளரோடு அதிமுக எம்பிக்களை நிறுத்தி விட்டனர்.

அதிமுக எம்.பிக்களும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கம்மென்று திரும்பி வந்து விட்டனர். இதுவே வேறு மாநிலத்தைச் சேர்ந்த எம்.பிக்களாக இருந்திருந்தால் பெரிய பிரச்சினையாக்கியிருப்பார்கள். குறிப்பாக கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருந்திருந்தால் பெரிய பிரச்சினையாக்கியிருப்பார்கள். மறைந்த என்.டி.ஆர். சொற்ப எம்.பிக்களை வைத்துக் கொண்டு டெல்லியை அன்று ஆட்டிப்படைத்ததை இன்று வரை யாராலும் மறக்க முடியாது.

ஆனால் அதிமுக எம்.பிக்கள் கப்சிப்பென்று திரும்பி வந்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் தம்பித்துரையிடம் விளக்கம் கேட்டனர். அதற்குத் தம்பித்துரை பதிலளிக்கையில், அதாவது கென்யா பிரசிடென்ட் வந்து விட்டார். பிரதமர் அவரைப் பார்க்கப் போய் விட்டதால் சந்திக்க முடியவில்லை என்றார்.

சரி போன முறையும் இதுபோல எம்.பிக்கள் வந்தபோது பிரதமர் சந்திக்கவில்லையே என்று கேட்டபோது அன்றும் ஒரு பிரசிடென்ட் வந்திருந்தார். அவருடன் சந்திப்பு இருந்ததால் சந்திக்க முடியவில்லை என்றார் தம்பித்துரை. தொடர்ந்து அவர் இதுகுறித்துப் பேசி எதுவும் ஆகப் போவதில்லை என்றும் தம்பித்துரை கூறினார்.

மூலக்கதை