கேப்டன் மிஸ்பாவை விடுத்து தோல்விக்கு பவுலர்களைக் குறைக்கூறும் பயிற்சியாளர் ஆர்தர்

தி இந்து  தி இந்து
கேப்டன் மிஸ்பாவை விடுத்து தோல்விக்கு பவுலர்களைக் குறைக்கூறும் பயிற்சியாளர் ஆர்தர்

நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தோல்விகளுக்கு பவுலர்களின் திறமையின்மையே காரணம் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கினால் பவுலர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், மொகமது ஆமிர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த பிறகு அவருக்கு மட்டுமே 20 கேட்ச்களைக் கோட்டை விட்டுள்ளனர் பாக். பீல்டர்கள்.

பிரிஸ்பன் டெஸ்ட்டிற்குப் பிறகே மிஸ்பா உல் ஹக்கின் கேப்டன்சி, களவியூகம் மிகவும் கேள்விக்குட்படுத்த வேண்டிய மோசமான நிலையில் இருந்தது, இதையும் பயிற்சியாளர் ஆர்தர் காரணமாகக் கூறவில்லை.

அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு அளித்துள்ள அறிக்கையில் பவுலர்களை மட்டுமே குறை கூறியுள்ளார் என்று வாரியத்தலைவர் ஷஹாரியார் கான் தெரிவித்தார்.

அவர் கூறும்போது, “மிக்கி ஆர்தர், பவுலர்கள் நல்ல அளவு மற்றும் திசையில் வீசவில்லை என்றும், அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்” என்றார்.

மேலும் தான் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகே தொடர்ந்து இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா என்று பயணம் மேற்கொண்டதால் உள்நாட்டு திறமைகளை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் உள்நாட்டு போட்டிகளை தான் பார்க்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அகமது ஷசாத், கம்ரன் அக்மல், சல்மான் பட் ஆகியோரது ஆட்டத்தையும் பார்க்க வேண்டும் என்று ஆர்தர் விரும்புகிறார். ஆர்தர் பயிற்சிப்பொறுப்பு ஏற்ற பிறகே பாகிஸ்தான் கடந்த 12 டெஸ்ட்களில் 8-ல் தோல்வி அடைந்துள்ளது.

இந்நிலையில் ஷஹாரியார் கான் கூறும்போது, மிஸ்பா என்ன முடிவெடுக்கிறார் என்பதை அவரிடமே விட்டுவிட இருக்கிறோம், ஏனெனில் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நிறைய பங்களிப்பு செய்துள்ளார் என்றார்.

Keywords: பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்தோல்விகள்மிஸ்பா உல் ஹக்பவுலர்கள்கிரிக்கெட்

மூலக்கதை