ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. சிம்பு ஆவேச பேச்சை திடீரென இருட்டடிப்பு செய்த சேனல்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு.. சிம்பு ஆவேச பேச்சை திடீரென இருட்டடிப்பு செய்த சேனல்கள்!

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சிலம்பரசன் கொடுத்த பேட்டியின் நேரடி ஒளிபரப்பை திடீரென சில தமிழ் டிவி சேனல்கள் கட் செய்து இருட்டடிப்பு செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மாலை, 4.30 மணிக்கு சிம்பு பேட்டியளிக்கப்போவதாக மீடியாக்களுக்கு தகவல் வந்தது. இதையடுத்து மீடியாக்கள் முன்கூட்டியே அங்கு குவிந்தன. ஆனால், தாமதமாகத்தான் பேட்டி ஆரம்பிக்கப்பட்டது. பேட்டியின் தொடக்கத்திலேயே மிகவும் முக்கியமான விஷயம் பேசப்போவதால் நிருபர்கள் செல்போன்களை சைலன்ட் மோடில் போட்டுவிடுங்கள் என்று பூடகத்தோடுதான் ஆரம்பித்தார் சிம்பு.

எனவே பல்வேறு தமிழ் செய்தி சேனல்களும் அவரது பேட்டியை நேரலையில் ஒளிபரப்பின. முதலில் தனக்கு தமிழின் மீது உள்ள காதல் குறித்து பேச ஆரம்பித்தார். 10 நிமிடத்திற்கு பிறகு பேச்சில் ஆவேசம் தென்பட்டது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியதோடு, ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று நடிகர் (ஆர்யா) சமூக வலைத்தளத்தில் எழுப்பிய கேள்வி குறித்து மறைமுகமாக கடுமையாக தாக்கி பேசினார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அவர் பகிரங்க அழைப்புவிடுத்தார். இப்படி பேட்டி உச்ச ஸ்தாபியில் சென்றபோது, ஒன்றன்பின் ஒன்றாக நைசாக பேட்டி நேரலையை சேனல்கள் கட் செய்ய ஆரம்பித்தன. டிஆர்பி எகிறும் என்றபோதிலும் பேட்டியை கட் செய்ய சில நெருக்கடிகள் காரணம் என தெரிகிறது.

அதேநேரம், ஒரே ஒரு சேனல் மட்டும் சிம்பு பேட்டியை இருட்டடிப்பு செய்யாமல் இறுதிவரை ஒளிபரப்பியது. கேள்வி-பதில் முடியும்வரை அந்த சேனல் நேரடி ஒளிபரப்பு செய்து அசத்தியது. ஒரு முன்னணி நடிகர் தற்போதைய சூழலில் ஒரு முக்கிய பிரச்சினை குறித்து பேசியபோது ஏற்கனவே நேரலை வாகனங்களை ரெடியாக வைத்து ஒளிபரப்பிய பல சேனல்கள் அதை இருட்டடிப்பு செய்ய ஆரம்பித்தது சிம்பு ரசிகர்களிடையேயும், தமிழ் மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இடையேயும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

மூலக்கதை