ஆம் ஆத்மி வென்றால் பஞ்சாபைச் சேர்ந்தவரே முதலமைச்சர்: கேஜ்ரிவால் விளக்கம்

தி இந்து  தி இந்து
ஆம் ஆத்மி வென்றால் பஞ்சாபைச் சேர்ந்தவரே முதலமைச்சர்: கேஜ்ரிவால் விளக்கம்

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றால், பஞ்சாபை சேர்ந்தவரே முதல் அமைச்சராவார் என அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். இதன்மூலம், மணிஷ் சிசோதியாவால் கிளம்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லியின் துணை முதல் அமைச்சரான மணிஷ் சிசோதியா நேற்று மொஹலியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர், தம் கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளர் என அர்விந்த் கேஜ்ரிவால் பெயரை மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால், டெல்லியில் முதல் அமைச்சர் கேஜ்ரிவால் பெயரால் சர்ச்சை கிளம்பியது. இவர் பஞ்சாபின் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படுவதை எதிர்கட்சிகளும் விமர்சித்தனர். இதை முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று கேஜ்ரிவால் விளக்க அளித்துள்ளார்.

இது குறித்து பட்டியாலாவின் பாத்ஷாபூரின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய கேஜ்ரிவால், ‘பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சிக்கு வெற்றி கிடைத்தால் பஞ்சாபை சேர்ந்தவரே முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். எங்கள் கட்சி சார்பில் யார் முதல் அமைச்சரானாலும், பஞ்சாபில் அளிக்கப்படும் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது எனது பொறுப்பு.’ எனத் தெரிவித்துள்ளார்.

மொஹலியின் கூட்டத்தில் பஞ்சாபின் முதல் அமைச்சர் வேட்பாளராக கேஜ்ரிவால் என்பது போல் பேசிய சிசோதியா பிறகு அதை மறுத்து இருந்தார். டெல்லியில் இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட கேஜ்ரிவால், தாம் அம்மாநிலத்தை விட்டு ஐந்து வருடங்களுக்கு எங்கும் செல்லப் போவதில்லை என உறுதி அளித்து இருந்தார் சிசோதியாவின் பேச்சால் கேஜ்ரிவால் தம் உறுதியை மீறி விட்டதாக சர்ச்சை கிளம்பியிருந்தது.

பஞ்சாபின் 117 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 4-ல் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஆம் ஆத்மியுடன் சேர்த்து, பஞ்சாபில் ஆளும் பாஜக-அகாலிதளம் கூட்டணி, எதிர்கட்சியான காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இந்த மூவருக்கு இடையே கடுமையான மும்முனைபோட்டி நடைபெறுகிறது.

Keywords: அரவிந்த் கேஜ்ரிவால்பஞ்சாப் தேர்தல்முதல்வர் வேட்பாளர்விளக்கம்மணிஷ் சிசோதியா

மூலக்கதை