“மோடி பட்டப்படிப்புப் படித்தாரா?” - இது தான் ஆர்.டி.ஐ கூறிய பதில்!

விகடன்  விகடன்
“மோடி பட்டப்படிப்புப் படித்தாரா?”  இது தான் ஆர்.டி.ஐ கூறிய பதில்!

கவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மோடி பட்டப்படிப்பு படித்ததற்கான ஆவணங்களைத் தருவதற்கு மறுப்புத் தெரிவித்து வந்த டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் குட்டு வைத்திருக்கிறது. இதனால் பிரதமரின் பட்டப்படிப்பு குறித்த ரகசியம் விரைவில் அம்பலம் ஆகும் எனத் தெரிகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

நீரஜ் சக்‌ஷேனா என்பவர், டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தலின் போது தாக்கல் செய்த அபிடவிட்டில் பழைய வீட்டு முகவரியைக் குறிப்பிட்டிருக்கிறார். புதிய முகவரியைக் குறிப்பிடவில்லை என்று சொல்லி இருந்தார். இதனைத் தொடர்ந்து தன் சரியான வீட்டு முகவரியை தேர்தல் ஆணையத்திடம் கெஜ்ரிவால் கொடுத்தார்.
அப்போது கருத்துத் தெரிவித்த கெஜ்ரிவால், பிரதமர் நரந்திரமோடி பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு எதுவும் படிக்கவில்லை. ஆனால் படித்ததாக லோக்சபா தேர்தல் அபிடவிட்டில்  குறிப்பிட்டிருக்கிறார்.  உண்மையான தகவல்களை வெளியிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  

டெல்லி பல்கலைக்கழகம் மறுப்பு

பிரதமர் நரேந்திரமோடி 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டபோது தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த அபிடவிட்டில் தனது கல்வித்தகுதி பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். குஜராத்தில் பள்ளி இறுதி வகுப்பு (SSC)முடித்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். அதே போல எம்.ஏ படிப்பை அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் படித்திருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். தேர்தல் அபிடவிட்டில் மோடி தாக்கல் செய்திருந்த தகவல்களின் அடிப்படையில் மோடியின் சான்றிதழ் நகல் உள்ளிட்ட ஆவணங்கள் தரும்படி டெல்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யோகேஷ் தியாகிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதினார். ஆனால், டெல்லி பல்கலைக்கழகம் இதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தரிடம் நேரிலும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், "இந்த தகவல்கள் எங்களிடம் இல்லை. பிரதமர் அலுவலகத்தில்தான் கேட்க வேண்டும்" என்று சொல்லப்பட்டது.
இது ஒருபுறம் இருக்க பிரதமரின் பட்டப்படிப்பு சான்றிதழின் நகல் கேட்டு பல்வேறு தரப்பில் இருந்து டெல்லிப் பல்கலைக்கழகத்துக்கு ஆர்.டி.ஐ மனுக்கள் செய்யப்பட்டிருக்கின்றன. எந்த ஒரு மனுவுக்கும் டெல்லி பல்கலைக்கழகம் உரிய பதிலை அளிக்கவில்லை. ஒரு மனுதாரருக்கு அனுப்பிய பதிலில், "பிரதமரின் பட்டப்படிப்பு ஆவணம் குறித்த தகவல் முன்றாம் நபர் சம்பந்தப்பட்டது என்பதால் அது குறித்த தகவல்களைத் தரமுடியாது" என்று தெரிவித்திருந்தது.

தகவல் ஆணையம் நடவடிக்கை

மத்திய தகவல் ஆணையத்திடம் இது குறித்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு அளிக்கப்பட்ட உத்தரவில், பொதுநலன் கருதி கேட்கப்படும் தகவலை அளிக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடியின் பட்டப்படிப்புச் சான்றிதழை பார்வையிடவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இலவசமாக நகல் எடுத்துத் தரும்படியும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
இதே போல இன்னொருவரும் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழ் குறித்த தகவல் கேட்டு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு மனு செய்திருந்தார். ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான கட்டணத்துக்காக 10 ரூபாய் மதிப்புள்ள போஸ்டல் ஆர்டர் இணைக்கவில்லை என்று கூறப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது குறித்தும் மத்திய தகவல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட உத்தரவில், கட்டணம் இணைக்கவில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. உரிய தகவல்களை வழங்க வேண்டும் என்று கூறிய தகவல் ஆணையம் டெல்லி பல்கலைக்கழகத்தின் தகவல் ஆணையருக்கு 25 ஆயிரம் அபராதமும் விதித்தார்.
இப்படி அடுத்தடுத்த உத்தரவுகள் காரணமாக நரேந்திரமோடியின் பட்டப்படிப்பு குறித்து உண்மையான தகவல் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

-கே.பாலசுப்பிரமணி

மூலக்கதை