முடிவின் தொடக்கம் வந்துவிட்டது: மோடியைக் குறிவைத்த மன்மோகன்

தி இந்து  தி இந்து
முடிவின் தொடக்கம் வந்துவிட்டது: மோடியைக் குறிவைத்த மன்மோகன்

ஏற்கெனவே பணமதிப்பு நீக்கத்தை ‘சட்டவிரோத கொள்ளை’ என்று தாக்கிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீண்டும் மோடியின் திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்.

‘ஜன வேதனா சம்மேளன்’ கூட்டத்தில் பேசிய மன்மோகன் சிங், “பணமதிப்பு நீக்கம் நாட்டை கடுமையாகத் தாக்கியுள்ளது. கடந்த 2 மாதங்களில் நிலைமைகள் தவறாகச் சென்றுள்ளன, ஆனால் மோசமானது இனிமேல்தான் காத்திருக்கிறது.

முடிவின் தொடக்கம் வந்துவிட்டது. தவறான புள்ளிவிவரங்களை மக்களுக்கு அளிக்கும் மோடியின் பிரச்சார வலை தோல்வியடைந்து விட்டது. இந்தியாவின் தேசிய வருமானம் கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்துல்ளது என்ற மோடியின் பிரச்சாரமும் பொய்த்துப் போனது.

7.6% வளர்ச்சி விகிதம் 7% ஆகக் குறைந்துள்ளது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பெரும் சரிவு கண்டுள்ளது.” என்று சாடியுள்ளார்.

உலகம் முழுதும் கேலி செய்யும் ஒரே இந்திய பிரதமர்: ராகுல் தாக்கு

இதே கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “உலகிலேயே மிகப்பெரிய பணமதிப்பு நீக்க நடவடிக்கை பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் ஆகியோரின் விருப்பங்களுக்கு ஏற்ப எடுக்கப்பட்டதே. முதல் முறையாக இந்தியப் பிரதமர் ஒருவர் உலகம் முழுதும் கேலிப்பொருளாகியுள்ளார்.

ஒவ்வொரு பொருளாதார அறிஞரும் பிரதமர் மோடி திறமையற்ற மிக மோசமான முடிவை எடுத்துள்ளதாகவே கூறிவருகின்றனர்.

தங்கள் முடிவுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை என்று மோடி தன்னிச்சையாக செயல்படுகிறார். மேக் இன் இந்தியா, ஸ்கில் இன் இந்தியா போன்றவற்றின் கீழ் ஒளிந்து கொள்ள முயன்று தோல்வியடைந்த பிரதமர் தற்போது உள்நாட்டு தயாரிப்பு ’பொருளாதார நிபுணர்’களான பாபா ராம்தேவ், மோகன் பாகவத் ஆகியோர் நிழலில் அண்டியுள்ளார். நாட்டின் நிதி முதுகெலும்பையே பிரதமர் உடைத்துள்ளார்.

அவரைக் கேள்வி கேட்டால் ‘நீ யார்?’ என்பார். நாடு மோடி, மோகன் பாகவத், அமித் ஷா ஆகியோரால் மட்டுமே நடத்தப்படுகிறது. பிரதமர் மோடி தூய்மை இந்தியா, சர்ஜிக்கல் ஸ்ட்ரைக், பணமதிப்பு நீக்கம் என்று தாவிக்கொண்டே இருக்கிறார், எப்போது ‘அச்சே தின்’ பிறக்கும்?” என்று தாக்கியுள்ளார் ராகுல் காந்தி.

Keywords: மன்மோகன் சிங்பணமதிப்பு நீக்க விமர்சனம்மோடிஇந்தியாபாஜககாங்கிரஸ்ஆர்.எஸ்.எஸ்.ராகுல் காந்திமோகன் பாகவத்அமித் ஷா

மூலக்கதை