இந்திய ஏ அணியை வீழ்த்தியது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஐபிஎல் அனுபவம் உதவியது - சாம் பில்லிங்ஸ் பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய ஏ அணியை வீழ்த்தியது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள ஐபிஎல் அனுபவம் உதவியது  சாம் பில்லிங்ஸ் பேட்டி

 
மும்பை: இந்தியா ஏ-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 304 ரன் குவித்தது.

அம்பதி ராயுடு 100, டோனி 68, தவான் 63, யுவராஜ் சிங் 56 ரன் எடுத்தனர். இதன்பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து 48. 5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

சாம் பில்லிங்ஸ் 93, ஜேசன் ராய் 62, ஜோஸ் பட்லர் 46 ரன் எடுத்தனர். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 5, ஹர்தீக் பாண்டியா, சஹால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

93 ரன் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவிய சாம் பில்லிங்ஸ் கூறுகையில், ‘மிகவும் வலுவான அணிக்கு எதிராக சிறப்பாக ரன்கள் சேர்த்துள்ளேன். புதிய மன நிலையுடன் விளையாட வந்துள்ளோம்.

சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள, ஐபிஎல்லில் விளையாடிய அனுபவம் உதவியது’ என்றார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து சமீபத்தில் விலகிய டோனி, இந்த போட்டியில் இந்தியா ஏ அணியை தலைமையேற்று வழி நடத்தினார்.



இந்திய அணிக்கான சீருடையில் கேப்டனாக டோனியின் கடைசி போட்டியாக இது அமைந்தது. இதனால் டோனி பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, ரசிகர்களின் கரவொலியால் மைதானம் அதிர்ந்தது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட மொத்தம் 23 ரன் எடுத்தார் டோனி. இந்த அதிரடி ஆட்டத்திற்காக, டிவிட்டரில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 47வது ஓவரில், டோனியும், ஹர்தீக் பாண்டியாவும் பிட்ச்சின் மத்தியில் நின்று ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் உள்ளே புகுந்து, டோனியின் பாதங்களை தொட்டு வணங்கினார்.

பாதுகாவலர்கள் அவரை வெளியேற்றும் முன்பாக, டோனியும் அந்த ரசிகருடன் கை குலுக்கினார். இதனிடையே அந்த ரசிகர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



ஐபிஎல்லில் கேப்டனாக தொடர்வேன் - டோனி அளித்த பேட்டியில், ‘இது மிகவும் ஸ்பெஷலான போட்டி. ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக என்னுடைய கடைசி போட்டி இது.

எனினும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து கேப்டனாக செயல்படுவேன்’ என்றார். இந்தியா ஏ-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது பயிற்சி போட்டி நாளை நடைபெறுகிறது.

இதில், இந்திய ஏ அணிக்கு ரஹானே கேப்டனாக செயல்படுகிறார்.


.

மூலக்கதை