பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு எதிராக கைது வாரன்ட் - கராச்சி நீதிமன்றம் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரமுக்கு எதிராக கைது வாரன்ட்  கராச்சி நீதிமன்றம் அதிரடி

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கராச்சியில் உள்ள மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி முகாமை முடித்து விட்டு தனது காரில், வாசிம் அக்ரம் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

கார்சா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அக்ரமின் கார் மீது மற்றொரு கார் மோதியது. அப்போது காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள், அக்ரமின் கார் மீது துப்பாக்கியால் சுட்டனர்.

இதில், வாசிம் அக்ரம் காயமின்றி தப்பினார்.

எனினும் இந்த சம்பவம் குறித்து பஹாத்ராபாத் போலீசில் வாசிம் அக்ரம் புகார் அளித்தார்.

விசாரணையில் துப்பாக்கி சுடு நடத்தியது ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான அம்ரூல் ரகுமான் என்பது தெரியவந்தது. ஆனால் தொடர்ச்சியாக 31 முறை இந்த வழக்கு விசாரணையின்போது, வாசிம் அக்ரம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார்.

இதனால் வாசிம் அக்ரமுக்கு எதிராக கராச்சியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம், பெயிலில் செல்லக்கூடிய வகையிலான ைகது வாரன்ட்டை பிறப்பித்துள்ளது. பின்னர் இந்த வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அப்போது வாசிம் அக்ரம் ஆஜராக நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிட்டது.



ஆனால் ஆத்திரத்தில் நடந்து விட்டதாக கூறப்படும் இந்த சம்பவத்தில் அம்ரூல் ரகுமான் மன்னிப்பு கேட்டு கொண்டதற்கு இணங்க, வாசிம் அக்ரம் சமாதானமாக சென்று விட்டதாக தெரிகிறது. இதனால்தான் இரு தரப்பை சேர்ந்தவர்களும் வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர் என தகவல்கள் வெளியாகிஉள்ளன.


.

மூலக்கதை