தீவிர கண்காணிப்புக்குள் யாழ்ப்பாணம்! பொலிஸார் அடாவடித்தனம்

PARIS TAMIL  PARIS TAMIL
தீவிர கண்காணிப்புக்குள் யாழ்ப்பாணம்! பொலிஸார் அடாவடித்தனம்

 யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் செயற்பாடுகள் குறித்து மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். 

 
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 
யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்தக் கூட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. 
 
கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கும் போது..
 
வீதிப் போக்குவரத்து கடமையில் உள்ள பொலிஸார் பொது மக்களை மதிப்பது இல்லை. குறிப்பாக வீதி ஓரமாக ஒழித்து நின்றுவிட்டு திருடர்களை மடக்கிப் பிடிப்பதைப் போல் திடீரென வீதிக்கு ஓடி வந்து வாகனங்களை மறிக்கின்றார்கள்.
 
மேலும் இரவு வேளைகளில் வீதியின் இரண்டு பக்கமும் நிற்கும் பொலிஸார் வாகனங்களையும், உந்துருளியில் செல்பவர்களை கண்டதும் சாரதியின் முகத்திற்கு ரோச் லைட் அடித்து மறிக்கின்றார்கள்.
 
பொலிஸார் வாகனங்களை நிறுத்துவதற்காக அவர்களுக்கு சமிஞ்சை விளக்குகள் வழங்கப்படுகின்றது. இருப்பினும் அவர்கள் வேண்டுமென்றே செய்வது போல் ரோச் லைட்டை முகத்திற்கு அடிக்கின்றார்கள்.
 
இதுமட்டுமல்லாமல் ஏ-9 வீதியின் கடமையாற்றும் பொலிஸார் திடீரென வாகனங்களுக்கு முன் சென்று வேக கணிப்பு கருவியை நீட்டுகின்றார்கள். வேறு வாகனத்தின் வேகக் கணிப்பினை அவர்களுக்கு காண்பித்து வழக்குப் பதிவு செய்யப் போவதாக கூறுகின்றார்கள்.
 
பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் பொலிஸாருடைய இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக சாதாரணமாக அவதானித்தாலே கண்டுகொள்ளக் கூடியதாக இருக்கின்றது என்று முறையிட்டிருந்தார்.
 
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸார் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தவே இவ்வாறான கடமைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
 
இருப்பினும் முகங்களுக்கு ரோச் லைட் அடித்து மறிப்பதை நிறுத்துமாறு சகல பொலிஸாருக்கும் அறிவித்தல் கொடுக்கப்படும்.
 
இனிவரும் நாட்களில் சிவப்பு சமிஞ்சை விளக்குகளைக் கொண்டே பொலிஸார் வாகனங்களை மறித்து சோதணை இடுவார்கள்.
 
வீதி விபத்துக்கள் மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படும். அக் கமராக்கள் ஊடக வீதியில் சட்டத்தை மீறுபவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவித்தார்.

மூலக்கதை