பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்ப்பு - சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பல்கலை நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்ப்பு  சவுரவ் கங்குலிக்கு கொலை மிரட்டல்

 கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவராக உள்ளார்.

அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் மெதினிபூர் என்ற நகரில் உள்ள வித்யாசாகர் பல்கலைக்கழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கங்குலி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், இந்த கடிதம் வந்துள்ளது. கங்குலியின் தாயார் நிருபாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில், ‘உங்கள் மகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கிறோம்.

அதையும் மீறி அவர் இங்கே வந்தால், உங்கள் மகனை நீங்கள் மீண்டும் பார்க்க மாட்டீர்கள்’ என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து கொல்கத்தா போலீஸ் கமிஷனர், மாவட்ட எஸ்பி உள்ளிட்டோரிடம் கங்குலி தெரிவித்துள்ளார். ஆனால் கங்குலி தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக புகார் எதுவும் வரவில்லை என கொல்கத்தா போலீஸ் துணை கமிஷனர் (தென் மேற்கு டிவிஷன்) மீரஜ் காலித் தெரிவித்தார்.

இது குறித்து கங்குலி கூறுகையில், ‘கொலை மிரட்டல் விடுத்து, கடந்த 7ம் தேதி எனக்கு கடிதம் வந்தது. இது குறித்து போலீசாரிடமும், பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடமும் தெரிவித்துள்ளேன்.

ஜனவரி 19ம் தேதி நடைபெற இருப்பது ஒரு நேரலை நிகழ்ச்சி.

ஆனால் அதில் கலந்து கொள்வது பற்றி இதுவரை நான் எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார்.

.

மூலக்கதை