அதிபராக பதவியேற்றவுடன் ஒபாமாவின் திட்டங்களை ரத்து செய்ய டிரம்ப் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிபராக பதவியேற்றவுடன் ஒபாமாவின் திட்டங்களை ரத்து செய்ய டிரம்ப் முடிவு

வாஷிங்டன் - அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கவுள்ள டிரம்ப், தற்போதைய அதிபர் ஒபாமா கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றிபெற்றார்.

வருகிற 20ம் தேதியன்று அவர் அதிபராக பதவியேற்கிறார். தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனை, அமைச்சர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட பணிகளில் டிரம்ப் மும்முரமாக உள்ளார்.

இந்நிலையில், அதிபராக பொறுப்பேற்றவுடன் ஒபாமா ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களை ரத்து செய்யவும், பல திட்டங்களில் மாற்றம் கொண்டுவரவும் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கான பணிகளை தற்போதே அவர் துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து குடியரசு கட்சி செய்தி தொடர்பாளர் சீன் ஸ்பைசர் கூறுகையில், ‘‘ஒபாமா ஆட்சி செய்த 8 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் உடனடியாக சீர்திருத்தம் செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அம்சங்களில் மாற்றங்களை கொண்டுவர உள்ளார். ஒபாமா ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள்’’ என்றார்.

ஒபாமா கொண்டுவந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், ரஷ்யாவுக்கு எதிராக அவர் எடுத்த நடவடிக்கைகள் போன்றவற்றில் மாற்றம் கொண்டுவரப்படும் என தெரிகிறது.

.

மூலக்கதை