இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் நாளை விடுதலை?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேர் நாளை விடுதலை?

கொழும்பு - இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 51 பேரை உடனடியாக விடுதலை செய்ய இருநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதனால் மீனவர்கள் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படலாம் என தெரிகிறது.

இதேபோல் 124 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக இருநாட்டு மீனவர்கள் கூட்டம் நவம்பர் 2ம் தேதியும், இருநாட்டு அமைச்சர்கள் அளவிலான கூட்டம் நவம்பர் 5ம் தேதி டெல்லியிலும் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சந்தித்து பேசும் வகையில் கூட்டு நடவடிக்கை குழு ஒன்றை அமைக்க வேண்டும். 6 மாதங்களுக்கு ஒரு முறை இருநாடுகளின் மீன்வளத்துறை அமைச்சர்க்ள கூட்டத்தை நடத்த வேண்டும் என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.



அதன்படி அமைக்கப்பட்ட இந்தியா-இலங்கை இடையேயான கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் கடந்த 31ம் தேதி டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் இருநாடுகளின் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டு முக்கிய ஆலோசனை நடத்தினர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கொழும்புவில் நேற்று இந்திய, இலங்கை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இந்தியா தரப்பில் மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங்கும், இலங்கை தரப்பில் மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீராவும் கலந்துகொண்டனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 51 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டது.

இதேபோல் தமிழக மீனவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட படகுகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசிக்கவும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. இந்தியா-இலங்கை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையில் பரஸ்பரம் இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களை விரைந்து விடுதலை செய்து தொடர்பாக நிலையான நடைமுறைகளை ஏற்படுத்தவும் இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதுதொடர்பாக இருநாடுகள் சார்பாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை: இரு நாடுகளாலும் ஏற்று கொள்ளப்பட்ட நம்பிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கடற்பகுதியில் கூட்டு ரோந்து பணியை அதிகரிப்பதற்கும், குறிப்பிட்ட கால இடைவெளியில் இருநாட்டு கடலோர காவல் படையினரும் பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இருநாடுகளும் தங்கள் கடற்பகுதியில் நுழையும் பிற நாட்டின் மீனவர்களை கைது செய்யும்போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாமல் இருப்பதையும், உயிரிழப்பு ஏற்படாமல் இருப்பதையும் உறுதி செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இவ்வாறு கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்திய, இலங்கை கூட்டு நடவடிக்கை குழுவின் 2வது கூட்டம் கொழும்புவில் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இலங்கை சிறையில் உள்ள 51 மீனவர்களின் காவல் நாளையும், நாளைமறுநாளும் முடிவடைகிறது.

இதனால் இன்று அல்லது நாளை மீனவர்கள் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

.

மூலக்கதை