பேரன்பு…மீம்ஸ்…ரஜினி…சென்னை! – மம்மூட்டி பேட்டி

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
பேரன்பு…மீம்ஸ்…ரஜினி…சென்னை! – மம்மூட்டி பேட்டி

பாலுமகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம், போன்ற தமிழின், இந்தியாவின் பெரும் படைப்பாளிகளின் ஆதர்ச நடிகர். மலையாள உலகின் சமூகப் பொறுப்புள்ள மெகா ஸ்டார். மலையாளிகளின் பேரன்புக்குப் பாத்திரமான மம்மூக்கா. தமிழர்களுக்கு என்றுமே அவர் அழகன், நட்புக்கு பெயர் சொல்லும் தேவா. கம்பீரத்தின் உருவம். மம்மூட்டி. முறுக்குமீசையோடும், பளீர் என்ற வெள்ளை நிற வேட்டியிலும், தனக்கேயுரிய ஸ்டைலோடு பேரன்பு படத்திற்காக டப்பிங் பணியில் இருந்தவரை பார்க்கக் கிடைத்தபோது பேசிக் களித்தவை…

தமிழ் சினிமாவுக்கு ஏன் இந்த இடைவெளி…

இடைவெளி வேண்டும்னு விடலை. சரியான கதையோ, சரியான புராஜெக்ட்டோ அமையல. என் நேரம், நான் வேலை செய்ற பாணி..இதெல்லாம் செட் ஆகுற டீமும், இயக்குநரும் முக்கியம். அது அமையல. அவ்ளோதான். பேரன்புல அது எல்லாம் சேர்ந்து அமைஞ்சது பண்ணிட்டேன். மத்தபடி தமிழில் நடிக்க நான் எப்பவும் ஆர்வமாதான் இருக்கேன்.

பேரன்பு…என்ன ஸ்பெஷல்?

அன்பை பத்தின கதைதான். கஷ்டத்தோட கதைதான். ஒரு மனிதன், பேரன்பு கொண்ட மனிதனா மாறுவதுதான் படம். தன் மேல, தனக்கு நெருக்கமானவங்க மேல மட்டுமில்லை. இந்த உலகத்து மேலயே பேரன்பு கொண்டவா மாறுறான். படத்தோட எந்த சின்ன விஷயத்தை சொன்னாலும் சிக்கல் ஆயிடும். டீசர் விடவே டைரக்டர் அவ்ளோ யோசிக்கிறாரு. கதை வெளியாகுறது கூட சிக்கல் இல்லை. தப்பா லீடு பண்ணிட கூடாது. ஒரு வரில சொன்னா பேரன்புக்கு மேல என்ன இருக்கு? அதான் படம்.

இயக்குநர் ராமோட ரெண்டு படத்தையும் பாத்திருக்கேன். ரொம்ப புடிச்சது. அவர் படங்களோட கலர், ஒளிப்பதிவு, கதைன்னு முழுப்படமுமே என்னை இம்ப்ரெஸ் பண்ணுச்சு. நண்பர் ஒருவர் மூலமா தொடர்பு கொண்டு கதை சொல்லணும்னு சொன்னாரு. கதை கேட்டதும் பிடிச்சது. இந்த கதையை வித்தியாசமான கதைன்னு சொலறதுக்கே யோசிக்க வேண்டியிருக்கு. எல்லா படங்களையும் அப்படித்தானே சொல்றோம்? ஆனா, பேரன்பு நிச்சயமா வித்தியாசமா இருக்கும். படம் பாக்கிற வரைக்கும் அந்த மேஜிக் புரியாது. பாத்துட்டா விலகாது. இத தாண்டி படத்தை பத்தி பேச எனக்கு அனுமதி இல்லை. ஏன்னா, படத்துல நிறைய சர்ப்ரைஸ் இருக்கு.

ராமுக்கு தமிழ் சினிமாவில் ரொம்ப சீரியஸ் ஆன ஆள் என்ற பெயர் உண்டு… அவருடன் வேலை செய்த அனுபவம் பற்றி…

எனக்கு அப்படி தோணல. ஒரு படம் தான் முடிச்சிருக்கோம். அதுக்குள்ள 10, 12 படங்கள் ஒண்ணா வேலை செஞ்ச அளவுக்கு நெருக்கம் ஆயிட்டோம். ரொம்ப கம்ஃபர்டபிளா வச்சுப்பாரு. ஒரு நண்பரா, ஒரு பிரதரா என்னை நல்லா பாத்துக்கிட்டாரு. எனக்குன்னு சின்ன சின்ன கெட்ட பழக்கம் இருக்கும் இல்ல? அதையெல்லாம் பொறுத்துக்கிட்டு நல்லா சமாளிச்சாரு. முதல் நாள் ஷூட்டிங் கொடைக்கானல்ல இருந்து 32 கிலோமீட்டர் தள்ளி போனோம். அங்க போனதும் பாதில திரும்ப வந்துட்டேன். என்னால அங்க நிக்க முடியல. அப்புறம் அங்கதான் 32 நாள் ஷூட் பண்ணோம். யூனிட் அங்கேயே தங்கிட்டாங்க. நான் கொடைக்கானல்ல. தினமும் ஸ்பாட்டுக்கு போகவே 3 மணி நேரம் ஆகும். தினமும் காலைல கிளம்பி போகணும். முன்னாடி அப்படிலாம் யோசிக்காம போவேன். இப்ப பண்றதில்லை. பேரன்புக்காக திரும்ப பண்ணியிருக்கேன். சில பேரு சொன்னா தட்ட முடியாதில்ல. அப்படித்தான் ராமும்..

இந்தப் படத்துல அதிக கேரக்டர்கள் கிடையாது. அதனால ஸ்பாட்ல சத்தமே போட மாட்டாரு. சத்தம் போடுற ஒரு ஆளு ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அவர் குரலே அப்படி. ரொம்ப நல்ல அவுட்புட் கொடுத்திருக்காரு. தயாரிப்பாளர் தேனப்பன் பத்தியும் சொல்லணும். அவ்ளோ பாவமானவர்.இந்தப் படத்துக்கு இப்படியொரு தயாரிப்பாளர் கிடைச்சது எங்களுக்குத்தான் நல்லது. பேரன்பு டீமே எனக்கு ஸ்பெஷல்தான்.

படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவங்கள் எதாவது…

சண்டை நடந்தா சொல்லலாம். வாக்குவாதமும் எதுவும் நடக்கல. அவர் சொன்னத நான் கேட்டுக்கிட்டேன். நான் செஞ்சத அவரும் ஓகே சொல்லிட்டாரு. ரொம்ப எளிமையான ஆள் ராம். நானும் அப்படித்தான்.

தமிழ் சினிமாக்களை பார்க்கிறீர்களா?

விசாரணை பார்த்தேன். ரொம்ப வித்தியாசமான, சென்சிபிளான படம். ஆஸ்கர் வரைக்கும் போயிருக்குல்ல? கிடைச்சா சந்தோஷம். அப்புறம் ஜோக்கர், குற்றம் கடிதல். இன்னும் நிறைய படங்கள். இந்த மாதிரி முயற்சிகளை மக்களும் வரவேற்கிறாங்க. அதுதான் முக்கியம்.

தமிழ் சமூகம் ஒரு கலவையான சமூகம். தமிழ்நாட்டுக்குள்ளயே பல பிரிவுகள் இருக்கு. அந்த வட்டார வழக்கு, கலாசாரம் இடத்துக்கு இடம் அவ்ளோ மாறும். அது சினிமாவுக்கு நல்லது. ஒவ்வொரு விஷயத்தை பத்தியும் அவ்ளோ சினிமா பண்ணலாம். அதனாலதான் தமிழ்ல நிறைய வெர்ஸட்டைலான படங்கள் வருது. கேரளால அந்த வாய்ப்பு கம்மி. மொத்த மாநிலத்துக்கும் ஒரே தன்மைதான்.

விருதுகள் பற்றி..

விருதுகள் எப்போதும் சந்தோஷமான விஷயம் தான். ஆனா அதுக்காகவே படம் எடுக்க முடியாது. கூடாது. ஒவ்வொரு விருதுக்கும் ஒரு ஜூரி இருப்பாங்க. அவங்களுக்கு பிடிச்சா விருது. நம்ம படத்தை நாமே நல்லாருக்கன்னு சொல்லக்கூடாது இல்லை. அதை சொல்றதுக்கு விருது தேவைதான். நம்ம வேலை, அந்த விருது தேர்வுக்கு படங்களை அனுப்பிட்டே இருக்கிறதுதான்.

நிறைய இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பு தந்தவர் நீங்க… என்ன காரணம்?

எந்த தனிப்பட்ட காரணங்களும் இல்லை. எதாவது புதுசா பண்ணனுன்ற ஆர்வத்தோட வர்றாங்க. அதை நான் செய்வேன்னு நினைக்கிறாங்க. நானும் அப்படிப்பட்ட கதைகளுக்காகத்தான் காத்திட்டிருக்கேன். சேர்ந்து பண்றோம். 80% அது சக்ஸஸ் ஆகியிருக்கு. எல்லா இடத்திலும் தோல்விகளும் இருக்குமில்ல. அத நான் பெருசா எடுத்துக்கிறது கிடையாது. நம்பி வர்றாங்க. நான் செஞ்சு கொடுக்கிறேன். அவ்ளோதான்.

அதே கேள்விதான்… இளமை ரகசியம்?

இதுக்கு என்ன பதில் சொல்றது (சிரிக்கிறார்)

சினிமா தாண்டி உங்கள் ரசனைக்குரிய விஷயங்கள்..

சினிமா எனக்கு பிடிச்ச துறை. அதுதாண்டியும் பல விஷயங்கள் பிடிக்கும். விவசாயம் பண்ணுவேன். புத்தகங்கள் வாசிப்பேன். பாட்டு கேட்பேன். பூமரம்னு ஒரு மலையாள பாட்டு… ஜெயராமோட மகன் நடிச்சிருக்காரு. கேட்க இன்பமா இருக்கு. உலக படங்கள் பாப்பேன். ஆனா, சினிமாவுல இருக்கிறவங்களுக்கு அப்படி நேரம் கிடைக்கறது குறைவுதான்.

என்ன மாதிரியான வாசிப்பு உங்களுடையது?

முன்ன நிறைய வாசிக்க முடிஞ்சது. இப்ப வேற நிறைய மீடியம் வந்துடுச்சு. டிவி, மொபைல்ன்னு எல்லாத்திலும் வாசிக்கலாம். கண்ணை மூடிட்டு பாட்காஸ்ட் கேட்கலாம். ரசிக்க வேற எளிமையான வழிகள் வந்திருக்குல்ல. அதை ரசிப்ப்போமே.. அதனால் புத்தகங்கள் படிக்கிறது குறைஞ்சிருக்கு. ஆனாலும், வாசிக்கிறேன்.

ஒரு நல்ல கதை ரீமேக் ஆகுறப்ப தோல்வி அடையுதே. கதை போதாதா?

நிச்சயமா சினிமாவுக்கு நல்ல கதை வேணும். ஆனா அது மட்டுமே போதாது. சினிமாவுக்கு வேற சில விஷயங்கள் தேவை. நல்ல டீம் அமையணும். கதையுலயும், கலாசாரம் சார்ந்த விஷயங்களை கவனிக்கனும். யுனிவர்சலான சில கதைகளை மட்டுமே ரீமேக் செய்ய முடியும். அதுலயும் அந்தந்த கலாசாரம் சார்ந்த விஷயங்களை கவனிக்காம விட்டா தோல்வியில முடியும்

மலையாளத்துல சினிமாவை எளிமையா எடுக்கற மாதிரி தெரியுதே…

இக்கரைக்கு அக்கரை பச்சைதான். அங்க இருக்கிறவங்களுக்கு தமிழ் சினிமா எளிமையாவும், நல்லாவும் இருக்கிறதா தோணும். இங்க இருக்கிறவங்களுக்கு மலையாள சினிமா அப்படின்னு தோணும். ரெண்டு சினிமாவுமே எளிமையாவும், நல்லாவும் இருக்குதுன்றதுதான் உண்மை.

சின்னத்திரை – பெரியத்திரை…

எல்லாம் ஸ்க்ரீந்தான? டி.வி. பெருசானா, சினிமா திரையும் பெருசாகுது. ஐமேக்ஸ் வருது. டிவிக்கு ஏன் போறீங்க.. மொபைல்லயும் ஸ்க்ரீன் இருக்கே.. சீக்கிரமே சினிமா அதுலயும் ரிலீஸ் ஆகும்.வர்ச்சுவல் ரியாலிட்டி, ஆக்மெண்ட்டட் ரியாலிட்டி வருது. கண்னாடி போட்டா பெரிய ஸ்க்ரீன் ஆயிடும். ஆனா, டெக்னாலஜி என்ன ஆனாலும் கிரியேட்டிவிட்டிதான முக்கியம்? அதுலயும் கதைதான சொல்ல போறோம்? அந்தக் காலத்திலும் சினிமா இருந்தது. இந்தக் காலத்திலும் இருக்கு. எந்தக் காலத்திலும் சினிமா இருக்கும்.

சென்னைப் பற்றி…

சென்னை எனக்கு இன்னொரு வீடு. ரொம்ப யூஷுவலா இருந்தாலும் இதான் உண்மை. எனக்கு சென்னைல ஒரு வீடு இருக்கு. வீடுன்னா முழுமையான வீடு. சாப்பாட்டுல இருந்து எல்லாமே வீட்டுல தான். மொழி தெரியும். நண்பர்கள் இருக்காங்க. அதனால சென்னை எனக்கு சொந்த ஊர் போலதான்.

இணையத்தில் நடக்கும் ட்ரோல் பற்றி…

அத ஜாலியாதான் எடுத்துக்கணும்.. மாடர்ன் கார்ட்டூன்னுதான் அதை நான் சொல்வேன். என் படத்தை பத்தி வந்த மீம்ஸ நானே என் ஃபேஸ்புக் பேஜ்ல ஷேர் செஞ்சிருக்கேன். ட்ரோலும் என்னை பொறுத்தவரைக்கும் இன்னொரு கலைதான். அதை ரசிக்க பழகிக்கொள்ளணும்.

மூலக்கதை