மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் பயங்கர வெடிவிபத்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
மெக்சிகோவில் பட்டாசு சந்தையில் பயங்கர வெடிவிபத்து

மெக்சிகோ, மெக்சிகோவில் உள்ள பட்டாசு சந்தையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 29 பேர் கருகி பலியாயினர். மேலும் 70 பேர் படுகாயமடைந்தனர்.   மெக்சிகோ நாட்டில் துல்திபெக் என்ற இடத்தில் மிகப் பெரிய பட்டாசு சந்தை செயல்பட்டு வருகிறது.

மிகவும் குறுகலான தெருக்களைக் கொண்ட இந்த பட்டாசு சந்தையில் நூற்றுக்கணக்கான பட்டாசு கடைகள் உள்ளன. நேற்று பிற்பகலில் உள்ளுர் நேரப்படி 2. 50 மணிக்கு  அங்கு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.


 
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குவதால் பட்டாசு சந்தையில் விற்பனை களை கட்டியிருந்தது. இதனால் ஏராளமான மக்கள் குவிந்ததால், வணிகர்களும் பட்டாசு விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

திடீரென ஏற்பட்ட தீ விபத்து மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும் பரவியது.   பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. வாண வெடிகள் பறந்து சென்றும் விழுந்தததில் மிகப் பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது.
சந்தையில் கூடியிருந்த மக்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

அப்பகுதியில் இருந்து ஏராளமான கடைகள் தீயில் கருகி நாசமாகின.

இந்த விபத்தில் இது வரை 26 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

70க்கும் அதிகமானோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தீயணைப்பு படையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கும் வேளையில் அங்கு ஏற்பட்ட தீ விபத்து அந்நாட்டு மக்களுக்கு பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை