ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஓட்டி 12 பேர் கொலை; 50 பேர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் மக்கள் கூட்டத்தில் லாரியை ஓட்டி 12 பேர் கொலை; 50 பேர் காயம்

பெர்லின்: ஜெர்மனியின் பெர்லின் நகரில் பரபரப்பான மார்க்கெட்டில் மக்கள் மீது சரக்கு லாரியை ஓட்டி தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. இதில் 12 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

சுமார் 50 பேர் காயம் அடைந்தனர். லாரியை ஓட்டி வந்தவர் பாகிஸ்தான் அல்லது ஆப்கனில் இருந்து வந்தவராக இருக்கும் என தெரிகிறது.

அவரை கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பரபரப்பான மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக கிறிஸ்துமஸ் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது.

இங்கு நேற்று இரவு வழக்கம் போல் வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொருட்கள் வாங்க அதிகளவில் மக்கள் குவிந்திருந்தனர்.



இந்நிலையில், மக்கள் கூட்டத்திற்குள் ஒரு சரக்கு லாரி அதிவேகமாக புகுந்தது. அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார், லாரியின் பின்னால் ஓடினர்.

தறிகெட்டு ஓடிய லாரியை சிறிது நேரத்தில் போலீசார் மடக்கினர். லாரியை ஓட்டிச் சென்ற வாலிபரை போலீசார் பிடித்தனர்.

லாரியில் இருந்த மற்றொரு நபர் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தில் 12 பேர் லாரியில் அடிபட்டு பிணமாகினர்.

50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக பெர்லினில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற தீவிரவாத தாக்குதல்கள் நடக்கும் நாடுகளை சேர்ந்த அகதிகள் ஜெர்மனியில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது மார்க்கெட்டில் லாரியை ஓட்டி மக்களை கொன்ற டி ரைவர், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானில் இருந்து அகதி போர்வையில் வந்த தீவிரவாதியாக இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

எனினும், சம்பவத்தை தீவிரவாதிகளின் தாக்குதல் என்று போலீசார் உறுதி செய்யவில்லை. பிடிபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கெல் இரங்கல் தெரிவித்ததுடன், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த கொடூர தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட உலக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த ஜூலை மாதம் இதேபோன்று தீவிரவாதி ஒருவன் மக்கள் கூட்டத்தில் லாரியை ஓட்டி தாக்குதல் நடத்தியதில் 86 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை