‘வீரசிவாஜி’ திரை விமர்சனம்

TAMILFILM NEWS  TAMILFILM NEWS
‘வீரசிவாஜி’ திரை விமர்சனம்

இளம் கதநாயகன் விக்ரம் பிரபு, பரவலான பாராட்டுகளைப் பெற்ற ‘தகராறு’ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் கணேஷ் விநாயக் உடன் இணைந்திருக்கும் ‘வீர சிவாஜி’ படத்துடன் தொடர்புடையவர்களின் திரை வாழ்க்கை பிரகாசிக்க உதவுமா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

பாண்டிச்சேரியில் கால் டாக்ஸி ஓட்டுபவன் சிவாஜி (விக்ரம் பிரபு). அந்த ஊரில் மெஸ் வைத்திருக்கும் பெண்மணி (வினோதினி) அவனை சொந்தத் தம்பிபோல் நடத்துகிறார். அவரது மகள் யாழினியும் அவனை மாமா என்று அன்புடன் அழைக்கிறாள். அவர்கள்தான் அவனது சொந்தங்கள் என்றிருக்கையில் அவனது காரை தன் பைக்கால் மோதி சேதம் ஏற்படுத்தும் அஞ்சலி (ஷாம்லி) மீது காதல் வருகிறது.

இந்நிலையில் யாழினிக்கு மூளையில் ஒரு கடுமையான நோய் இருப்பதால் 25 லட்ச ரூபாய் செலவின் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்காக பணம் புரட்ட முயற்சிக்கிறான் சிவாஜி.

பல ஊர்களில் பல வகையான போலித் திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி அவர்கள் பணத்தைப் பறிக்கும் குழுவின் தலைவன் (ஜான் விஜய்) விரிக்கும் வலையில் விழும் சிவாஜி, தன் காரை விற்று சேர்த்து வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாயைப் பறிகொடுக்கிறான்.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவுடன் அந்தக் குழுவையும் அதன் தலைவனையும் சட்டத்தின் பிடியில் சிக்க வைத்து தன் பணத்தையும் மீட்கக் கிளம்புகிறான். சக்தியை மட்டுமல்லாமல் புத்தியையும் பயன்படுத்தி இதை எப்படி சாதிக்கிறான் என்பதே மீதிக் கதை.

பணம் தொடர்பான குற்றங்களின் பின்னணியில் ஒரு பரபரப்பான க்ரைம் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம். ஆனால் கதையின் இந்த மையப்புள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் வெகு குறைவாகவும் கமர்ஷியல் என்ற பெயரில் திணிக்கப்பட்ட காதல், செண்டிமெண்ட் மற்றும் காமடிக் காட்சிகள் மிக அதிகமாகவும் இருப்பதால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.

கதாபாத்திரங்கள், அவர்களுக்கிடையிலான தொடர்புகள் ஆகியவற்றை விளக்க முதல் பாதியின் 40 நிமிடங்களுக்கு மேல் ஆகிவிடுகிறது. ஹீரோ-வில்லன் நேரடி மோதல் அதன் பிறகுதான் தொடங்குகிறது. ஆனால் அந்தப் புள்ளியிலிருந்து இடைவேளை வரை படம் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் நகர்கிறது. இந்தக் காட்சிகளில் வில்லனை சிக்கவைக்க நாயகன் பயன்படுத்தும் ஐடியாக்கள் புத்திசாலித்தனமாகவும் ரசிக்கும்படியும் உள்ளன. இடைவேளைக் காட்சி ஒரு சின்ன ட்விஸ்டுடன் இரண்டாம் பாதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது.

ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறது. மீண்டும் காதல், செண்டிமெண்ட், காமெடிக் காட்சிகள் அதிக இடத்தைப் பிடித்துக்கொள்கின்றன. இவற்றில் காதல் காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லாததால் ரசிக்க முடியவில்லை. செண்டிமெண்ட் காட்சிகளிலும் போதுமான அழுத்தம் இல்லை.யோகிபாபு-ரோபோ சங்கர் புண்ணியத்தில் காமெடிக் காட்சிகளில் ஆங்காங்கே சிரிப்பு வருகிறது. கடைசியில்தான் வில்லன் வருகிறார். அப்போது நமக்கிருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய்விடுகிறது.

ஏற்கனவே சுவாரஸ்யமின்றிப் பயணிக்கும் திரைக்கதையில் இடையிடையே பாடல்கள் வேறு வந்து அலுப்பைக் கூட்டுகின்றன. குறிப்பாக தன் ப்ரியத்துக்குரிய குழந்தையின் உயிரைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கும் நாயகன், ஐடம் பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடுவதெல்லாம் ரொம்ப ஓவர்.

விக்ரம் பிரபு கதாபாத்திரத்துக்கு தன்னால் இயன்றவரை உயிர் கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கச்சிதமாகப் பொருந்துகிறார். எமோஷனல் நடிப்பிலும் தேறுகிறார். பல ஆண்டுகளுக்குப் பின் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் மறுவருகை புரிந்திருக்கும் ஷாம்லி பற்றி சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஒன்றும் இல்லை.

புத்திசாலித்தனம் நிறைந்த கொள்ளைக் கூட்டத் தலைவனாக ஜான் விஜய் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். காமடி கலந்த வில்லன் வேடத்தில் ’நான் கடவுள்’ ராஜேந்திரன் அவ்வப்போது கலகலப்பூட்டுகிறார். யோகி பாபு மற்றும் ரோபோ ஷங்கர் சிரிக்கவைக்கும் தங்கள் பணியை சரியாகச் செய்திருக்கிறார்கள்.

டி.இமானின் பாடல்கள் படத்தின் நீளத்தை அதிகரித்திருப்பதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை. பின்னணி இசை, ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகளுக்கு தக்க துணை புரிகிறது. எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு பாண்டிச்சேரியை அழகாகக் காட்சிபடுத்தியிருக்கிறது.

மொத்தத்தில் சுவாரஸ்யமான நாயகன் – வில்லன் சேசிங் காட்சிகளாலும், யோகி பாபு மற்றும் ரோபோ சங்கர் தரும்
நகைச்சுவையாலும் ஓரளவு காப்பாற்றப்படுகிறது ‘வீர சிவாஜி’. ஓரளவுதான்.

மூலக்கதை