ஜெயலலிதா குறித்து பரவிய வதந்தீ... தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஸ்தம்பிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜெயலலிதா குறித்து பரவிய வதந்தீ... தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஸ்தம்பிப்பு!

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து ஞாயிறு மாலை முதலே வதந்தி பரவியது. அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதை அடுத்து எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் என ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22ம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர், தொடர்ந்து 75 நாளாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், நேற்று இரவு திடீரென முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது.

நேற்றிரவு 9.30 மணியளவில் அப்பல்லோ மருத்துவமனை முன்பு அதிமுக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். முதல்வர் ஜெயலலிதாவிற்கு இதயமுடக்கம் ஏற்பட்டதாகவும், அவருக்கு எக்மோ கருவிகள் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியானது.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியானதை அடுத்து நேற்றிரவு முதலே வெளியூர் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. திருமணம், விசேஷங்களுக்கு சொந்த ஊர் சென்றவர்கள், சென்னை போன்ற நகரங்களுக்கு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர். பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதை அடுத்து இருசக்கர வாகன ஓட்டிகள், கார்களில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

மதுரை புறநகர் பகுதிகளிலும், தேனி, நெல்லை உள்ளிட்ட கிராமங்களிலும் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பல பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.

 

 

முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தி பரவியதால் சென்னையில் பிற்பகல் முதலே அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின.

 

 

கடைகள் அடைக்கப்படும் என்று செய்தி வெளியானதால் உடனடியாக மக்கள் காய்கறிகள், மளிகை சாமான்களை வாங்க கடைகளுக்கு திரண்டனர். இதனால் காய்கறிகள் விலைகள் அதிகரித்தன.

 

 

நேரம் செல்லச் செல்ல மிக மோசமான நிலையில் இருப்பதாக பீலே அறிக்கை வெளியாகவே, பள்ளிகளில் இருந்து பெற்றோர்களுக்கு அவசர குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. இதனையடுத்து பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அவசரம் அவசரமாக அழைத்துச் சென்றனர்.

முதல்வர் ஜெயலலிதா காலமானதாக மாலை 5.30 மணிக்கு செய்தி வெளியானதால் உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன.பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டன. பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் வீடு திரும்புவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பரவிய திடீர் வதந்தியால் பொதுமக்களும், அலுவலகத்திற்கு சென்றவர்களும்தான் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.

மூலக்கதை