முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடம்.. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை கவலைக்கிடம்.. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலனைக் கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் போதிய போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரிய அளவில் எங்கும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

சென்னை அப்பல்லே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீசாருக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் அறிவுறுத்தினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து நேற்று மாலையில் இருந்தே அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகியதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பதற்றமான சூழல் நிலவியது. அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீஸார் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். பெங்களூருவில் இருந்து 1,500 துணை ராணுவப்படையினரும் சென்னை வந்தடைந்தனர்.

சென்னையில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாரு பாதுகாப்பு மேற்கொள்ள ஐ.ஜி.க்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். அப்பல்லோ மருத்துவமனை வளாகம் அமைந்துள்ள ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோடு முழுவதும் பேரிகாடர்கள் அமைக்கப்பட்டு போக்குவரத்து இணை ஆணையர் பவானீஸ்வரி தலைமையில் சீல் வைக்கப்பட்டது. அப்பல்லோ மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீடு, ஆழ்வார்பேட்டையில் உள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஆகிய இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் உடல்நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் விமானம் நிலையம் முதல் அப்பல்லோ மருத்துவமனை வரை போலீஸ் கான்வாய் அமைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து நகரங்களிலும் போதிய போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் பெரிய அளவில் எங்கும் அசம்பாவிதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

மூலக்கதை