முதல் அமைச்சர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்: ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

தினத்தந்தி  தினத்தந்தி
முதல் அமைச்சர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம்: ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

சென்னை,

முதல் அமைச்சர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.

முதலமைச்சருக்கு சுவாசம், இதய செயல்பாடு உதவிக்காக எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

டாக்டர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிர்காக்கும் கருவிகள் மூலம்  அவருக்கு சிகிச்சை அளிக்கபடுகிறது என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று திரும்ப வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, கேரள ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, ம.தி.மு.க. பொது செயலாளர் வை.கோ. உள்ளிட்டோர் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், தம்முடைய வாழ்க்கையில் பல சோதனைகளை சந்தித்தவர் ஜெயலலிதா.  அவை அனைத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.  இந்த சோதனையிலும் அவர் வெற்றி பெறுவார்.  அவர் விரைவில் குணமடைய கட்சி சார்பில் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.

மூலக்கதை