முதல் அமைச்சரின் உடல் நலம் பற்றி பிரதமரிடம் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு...

தினத்தந்தி  தினத்தந்தி
முதல் அமைச்சரின் உடல் நலம் பற்றி பிரதமரிடம் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு...

சென்னை,

முதல் அமைச்சரின் உடல் நலம் பற்றி அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று கேட்டறிந்து திரும்பிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பிரதமரிடம் விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதல் அமைச்சருமான ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலை பின்னடைவு ஏற்பட்டது. திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், உடனடியாக அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும், கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து அவசரமாக நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னை வந்தார்.

முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு   “கார்டியாக் அரெஸ்ட்” என்று கூறப்படும் இதயம் செயல் இழப்பு ஏற்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனடியாக அவரது இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கான சிகிச்சையை தீவிரப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், டாக்டர்கள் தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகின்றனர்.  உயிர்காக்கும் கருவிகள் மூலம்  அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.

முதல் அமைச்சரின் உடல்நிலை பற்றி அறிந்து அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு சிகிச்சை பற்றி கேட்டறிந்து திரும்பி சென்றுள்ளார்.

அதன்பின்னர் அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல் அமைச்சரின் உடல் நலம் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.  சூழ்நிலையை கண்காணிக்க வெங்கய்யா சென்னையில் தங்கியுள்ளார்.

மூலக்கதை