குரு பாக்யராஜை கவுரவித்த சிஷ்யன் பார்த்திபன்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
குரு பாக்யராஜை கவுரவித்த சிஷ்யன் பார்த்திபன்!

புதுமைச் சுரங்கம் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது "கோடிட்ட இடங்களை நிரப்புக" படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை கே.பாக்யராஜ் சாருக்கு மரியாதை செய்யும் குரு வணக்கம் விழாவாக அமைத்து வழக்கம்போல அசத்தி / நெகிழ்த்தி - விட்டார்.

அழைப்பிதழிலேயே துவங்கிவிட்டது அவரின் புதுமைக் கச்சேரி. அழைப்பிதழின் முதல் காகிதத்தில் ஸ்க்ரீன்ப்ளே என்று ஒரே ஒரு வார்த்தை. அடுத்தது ஒரு கார்பன் ஷீட். அதற்கும் அடுத்த ஷீட்டில் கே.பாக்யராஜ் என்று ஒரே ஒரு வார்த்தை. இதைவிட வேறென்ன சொல்ல முடியும்?

நிகழ்ச்சி மேடையிலும் இது தொடர்ந்தது. மேகம் செட் போட்டு அதற்குள்ளிருந்து எங்கள் குரு கே.பாக்யராஜ் சார் மீது மல்லிகைப் பூக்களை மழையாகப் பெய்ய வைத்தார். கிட்டத்தட்ட நாங்கள் நாற்பது உதவியாளர்கள் (அனைவரும் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில்) ஆறடி சைஸில் அழகான பேனாவை ட்ரம்ஸ் சிவமணி இசைப் பின்னணியுடன் ஏந்தி வந்து கொடுத்தோம்.

படத்தின் நாயகன் சாந்தனு லைவாக பாடல்களுக்கு நடனமாடினார். பாக்யராஜ் சார் பற்றிய பழைய நினைவுகளைக் கிளப்பும் அற்புதமான ஒரு வீடியோத் தொகுப்பு. அணில்கபூர், மம்முட்டி,அமிதாப் பச்சனின் பாராட்டுக்கள் திரையில் ஒளிபரப்பப்பட்டது. ரஜினிகாந்தின் வாழ்த்து படிக்கப்பட்டது. அதே மேகத்திற்குள்ளிருந்து திடுக்கென்று மெகா சைஸ் ஆடியோ சிடி வெளியே வர.. அதுதான் வெளியீடு.

சுகாசினியும் ரோஹிணியும் நிகழ்ச்சியைத் தொகுக்க.. பிரபு, கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு,கங்கை அமரன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.பி.பி, ஷங்கர், வஸந்த், விஷால், நாசர்,தாணு,ஏ.வி.எம்.சரவணன்,. கரு.பழனியப்பன், எஸ்.ராமகிருஷ்ணன், சரண், நலன் குமாரசாமி, கார்த்திக சுப்புராஜ், லிங்குசாமி,சிவகுமார் என்று வாழ்த்திப் பேசிய அனைவருமே இதயத்திலிருந்து பேசினார்கள்.

பார்த்திபன் தன் உரையை தன் உதவியாளரை வைத்துப் பேச வைத்தார். குரல் அவருடையது. கருத்து இவருடையது. அதிலும் புதுமை. "எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுபோல அத்தனைப் பாராட்டையும் என் குருவுக்கு சமர்ப்பிக்கிறேன். என்னோடு ஒத்துழைத்த அத்தனை உதவி இயக்குனர்களும் இல்லாமல் இந்த சாதனை சாத்தியமில்லை" என்றார் பாக்யராஜ் சார்.

இறுதியாகப் பேசிய மகா குரு பாரதிராஜா நெகிழ்ச்சியுடன், "நான் ஒரு விதையை நட்டேன்.. அவ்வளவுதான்.. அது வீரியமுள்ள விதை என்பதால் இப்படி விரு்ட்சமாக வளர்ந்தது'' என்றார்.

நான் பேசியதன் சுருக்கம்:

அந்த ஏழு நாட்கள் படத்தை ரீமேக் செய்தால் இன்றைக்கு அதே கிளைமாக்ஸ் வைக்க முடியுமா என்பது சந்தேகமே. தாலிதான் பிரச்சினையா, இதோ கழட்டிட்டேன் என்று இன்றைய கதாநாயகி சொல்லலாம்.

விவாகரத்து கேட்டு குடும்ப கோர்ட்டுகளுக்குச் செல்கிற தம்பதிகளுக்கு கவுன்சிலிங் போது மெளன கீதங்கள் படத்தைப் போட்டுக் காட்ட வேண்டும். முழுமையான அன்பு இருந்தால் எதையும் மன்னிக்கலாம் என்று சொன்ன படம் அது.

ஜனரஞ்சகமாக அதே சமயம் அழுத்தமாக ஜாதி வேறுபாடுகளைச் சாடிய முத்திரைப் படம் இது நம்ம ஆளு.

தாவணிக் கனவுகள் படத்தில் ஒரு மோசமான சொதப்பல் காட்சியையும் அமைத்து அதேக் காட்சி எப்படி சிறப்பாக அமைக்க வேண்டும் என்றும் இரண்டு விதமாகவும் அமைத்தது ஒரு சவாலான காட்சியமைப்பு.

மாலை 4.30 மணிக்குத் துவங்கிய விழா முடியும்போது 10.30. ஆறு மணி நேரம் மொத்த அரங்கத்தையும் கட்டிப் போட்டது பாக்யராஜ் சாரின்மீது நாற்பதாண்டு காலமாக மக்கள் வைத்திருக்கும் என்றும் மாறாத அன்பு இல்லாமல் வேறென்ன?

- பட்டுக்கோட்டை பிரபாகர்

மூலக்கதை