ஐஎஸ்எல் கால்பந்து 10ம் தேதி முதல் அரையிறுதி போட்டிகள்

தினகரன்  தினகரன்
ஐஎஸ்எல் கால்பந்து 10ம் தேதி முதல் அரையிறுதி போட்டிகள்

கொச்சி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சீசன்-3 தொடர் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கியது. லீக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. கொச்சியில் நடந்த கடைசி லீக் போட்டியில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எப்சி (கவுகாத்தி) அணியை 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் வீழ்த்தியது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி எப்சி (23 புள்ளிகள்), கேரளா பிளாஸ்டர்ஸ் (22 புள்ளிகள்), டெல்லி டைனமோஸ் எப்சி (21 புள்ளிகள்), அத்லெடிகோ டி கொல்கத்தா (20 புள்ளிகள்) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்சி, எப்சி புனே சிட்டி, சென்னையின் எப்சி, எப்சி கோவா ஆகிய 4 அணிகள் பரிதாபமாக வெளியேறின. புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த மும்பை-நான்காம் இடத்தை பிடித்த கொல்கத்தா, இரண்டாம் இடத்தை பிடித்த கேரளா-மூன்றாம் இடத்தை பிடித்த டெல்லி அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அரையிறுதி போட்டி 2 ‘லெக்’களை கொண்டதாக நடத்தப்படுகிறது.  இதன்படி முதல் அரையிறுதியின் முதல் லெக்கில் மும்ைப-கொல்கத்தா அணிகள் கொல்கத்தாவில் வரும் 10ம் தேதி மோதுகின்றன. 2வது அரையிறுதியின் முதல் லெக்கில் கேரளா-டெல்லி அணிகள் ெகாச்சியில் வரும் 11ம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன. முதல் அரையிறுதியின் 2வது லெக் போட்டியில், மும்பை-கொல்கத்தா அணிகள் வரும் 13ம் தேதி மும்பையில் மோதுகின்றன. 2வது அரையிறுதியின் 2வது லெக் போட்டியில், கேரளா-டெல்லி அணிகள் வரும் 14ம் தேதி டெல்லியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்த வகையில் அரையிறுதியில் ஒவ்வொரு அணியும் 2 ‘லெக்’களில் விளையாடவுள்ளன. இந்த 2 போட்டிகளிலும் சேர்த்து, தன்னை எதிர்த்து விளையாடும் அணியை விட அதிக கோல் அடிக்கும் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும். இறுதி போட்டி வரும் 18ம் தேதி கொச்சியில் நடைபெறுகிறது.

மூலக்கதை