ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு: ஜெர்மனி பயிற்சியாளர் பேட்டி

தினகரன்  தினகரன்
ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி கோப்பையை வெல்ல இந்தியாவுக்கே அதிக வாய்ப்பு: ஜெர்மனி பயிற்சியாளர் பேட்டி

லக்னோ: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இதில், கலந்து கொள்ளும் ஜெர்மனி ஜூனியர் அணி நேற்று லக்னோ வந்தடைந்தது. அப்போது அந்த அணியின் பயிற்சியாளர் வாலண்டைன் ஆல்டென்பர்க் கூறுகையில், ஜூனியர் உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகமாக காணப்படுகிறது. இதற்காக அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்துள்ளனர். இந்திய ஜூனியர் அணியின் பயிற்சியாளர் நரேந்திரா சிறப்பாக பணியாற்றி வருகிறார். இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) தொடரில் விளையாடியவர்கள். உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராகவோ அல்லது சிறந்த வீரர்களுடன் இணைந்தோ அவர்கள் விளையாடியிருப்பதன் மூலம் உயர்தர ஹாக்கியை பற்றி அவர்களால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. எந்த அணியாவது உலக சாம்பியன் ஆக வேண்டும் என விரும்பினால், அவர்கள் இந்தியாவை வீழ்த்தியாக வேண்டும் என்றார். கடந்த 2009, 2013ம் ஆண்டுகளில் ெஜர்மனி அணி ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போதும் வெற்றி பெற்றால், அது ஹாட்ரிக் சாதனையாக அமையும். ஒட்டுமொத்தமாக ஜெர்மனி அணி இதுவரை 6 முறை ஜுனியர் உலக கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த முடிந்த ரியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனி சீனியர் ஆண்கள் அணி வெண்கல பதக்கம் வென்றது. அந்த அணியின் பயிற்சியாளராகவும் வாலண்டைன் ஆல்டென்பர்க் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை