'பஞ்சாயத்து' டிவி நிகழ்ச்சிகள், சீனியர் நடிகைகள் மோதல் ஏன் ?

தினமலர்  தினமலர்
பஞ்சாயத்து டிவி நிகழ்ச்சிகள், சீனியர் நடிகைகள் மோதல் ஏன் ?

தமிழ்த் தொலைக்காட்சிகளில் 'கதையல்ல நிஜம்' நிகழ்ச்சியை காப்பியடித்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்தான் 'சொல்வதெல்லாம் உண்மை, நிஜங்கள்'. இது போல இன்னும் மற்ற தமிழ் டிவிக்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் டிவிக்களிலும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

ஏழை, மற்றும் நடுத்தர மக்களின் குடும்பப் பிரச்சனைகளை வீதிக்குக் கொண்டு வரும் நிகழ்ச்சிகளாகவே இந்த நிகழ்ச்சிகள் இருக்கின்றன என்பது பலரது குற்றச்சாட்டுக்களாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளிவந்த 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைக் கிண்டலடித்து ஒரு காட்சி இருந்தது. அதைப் பற்றி 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியின் தொகுப்பாளரான லட்சுமி ராமகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தார். கடைசியில் அவர் டிவிட்டரே வேண்டாமென போய்விட்டார்.

மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பற்றி ஒரு விவாதம் ஆரம்பமாக, 80களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நடிகை ஸ்ரீப்ரியா தன் பங்கிற்கு நடிகைகள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கக் கூடாது, மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க நீதிமன்றங்கள் இருக்கின்றன, சமூக நல அமைப்புகள் இருக்கின்றன என கருத்து தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து 'கடலோரக் கவிதைகள்' ரஞ்சனியும் தனது முகப்புத்தகத்தில் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். அதில் குஷ்புவைப் பற்றி நேரடியாகவே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.

அதையடுத்து கடந்த சில நாட்களாகவே இந்த விவகாரம் குறித்து பரபரப்பு நிலவி வந்தது. விசாரித்துப் பார்த்தால் இது டிவியில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு முக்கிய நடிகை பின்னணியில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட சேனலில் இந்த நிகழ்ச்சி வருவதையும், அதை ஒரு முன்னணி நடிகை தொகுத்து வழங்குவதையும் அவர் விரும்பவில்லையாம். அதையடுத்தே தனது நட்பு வட்டார நடிகைகளிடம் சொல்லி இது பற்றிய பிரச்சனைகளைப் பதிவு செய்யுங்கள் என்று சொன்னாராம்.

ஒரு தனிப்பட்டவரின் கோபம் இப்போது சேனல்களுக்கிடையேயான யுத்தமாக மாறியிருக்கிறது. இன்னும் இந்தப் பிரச்சனை எப்படியல்லாம் போகப் போகிறது என டிவி வட்டாரங்களில் விஷயமறிந்தவர்கள் வாய் மூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மூலக்கதை