பெண்கள் ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’ 6 முறையும்...

தினத்தந்தி  தினத்தந்தி
பெண்கள் ஆசிய கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’
6 முறையும்...

பாங்காங்

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை பதம் பார்த்து 6-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

பெண்கள் ஆசிய கோப்பை

6 நாடுகள் இடையிலான பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடந்து வந்தது. இதன் இறுதி ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி, முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் நேர்த்தியான ஆட்டத்தால் 5 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனையாக இறங்கிய மிதாலி ராஜ் 73 ரன்களுடன் (65 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தனது 10-வது அரைசதத்தை பூர்த்தி செய்த மிதாலி ராஜிக்கு 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும்.

கடைசி கட்டத்தில் சவாலான ஸ்கோரை எட்ட உதவிய ஜூலன் கோஸ்வாமி 10 பந்தில் 2 சிக்சருடன் 17 ரன்கள் விளாசினார். இவர்களை தவிர்த்து வேறு யாரும் இந்திய அணியில் இரட்டை இலக்கை தொடவில்லை.

இந்தியா சாம்பியன்

நான்கு லீக்கில் 2-வது பேட் செய்து வெற்றி கண்டிருந்ததால் மிகுந்த நம்பிக்கையுடன் பாகிஸ்தான் பேட் செய்தது. ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக பந்து வீசி எதிராளியை மிரட்டினர். அதிரடி காட்ட முடியாமல் திணறிய பாகிஸ்தான் வீராங்கனைகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்து பணிந்தனர். இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து கோப்பையை சொந்தமாக்கியது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிஸ்மா மரூப் 25 ரன்களும், துணை கேப்டன் ஜாவேரியா கான் 22 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் எக்கா பிஷ்ட் 2 விக்கெட்டும், அனுஜா பட்டீல், கோஸ்வாமி, ஷிகா பாண்டே, பிரீத்தி போஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

கடந்த மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. பாதுகாப்பு பிரச்சினையை காரணம் காட்டி பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆட மறுத்ததால் இந்தியாவுக்கு 6 தரவரிசை புள்ளிகள் அபராதமாக விதிக்கப்பட்டது. இதற்கு எல்லாம் வட்டியும் முதலுமாக இந்த தொடரில் பாகிஸ்தானை இரண்டு முறை துவம்சம் செய்து இந்தியா வஞ்சம் தீர்த்துக் கொண்டது.

6-வது முறையாக...

தோல்வி பக்கமே செல்லாத இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்வது இது 6-வது முறையாகும். முதல் 4 ஆசிய கோப்பை போட்டி 50 ஓவர் வடிவில் (2004, 2005-06, 2006-07, 2008) நடைபெற்றது. கடைசி இரு ஆசிய கோப்பை போட்டி 20 ஓவர் வடிவில் (2012, 2016) நடத்தப்பட்டது.

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வி காணாத இந்திய அணி 6 முறையும் சாம்பியன் கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்துள்ளது. இதில் ஒரு நாள் வடிவிலான தொடரின் இறுதி ஆட்டங்களில் இலங்கையையும் (4 முறை), 20 ஓவர் வடிவில் நடந்த தொடரின் இறுதி ஆட்டங்களில் பாகிஸ்தானையும் (2 முறை) வீழ்த்தி, ஆசியாவில் தனது ஆதிக்கத்தை இந்தியா கம்பீரமாக நிலைநிறுத்தியுள்ளது.

கேப்டன்கள் கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறும் போது, “நாங்கள் திட்டமிட்டபடி எல்லாம் சரியாக அமைந்தது. இந்த ஆடுகளத்தில் நாங்கள் நிறைய ஆட்டங்களில் விளையாடி இருக்கிறோம். இது சுழற்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளம் என்பதை அறிவோம். ‘சரியான திசையில் பந்து வீசி, ரன் எடுக்க விடாமல் கட்டுப்படுத்துங்கள்’ என்று பவுலர்களிடம் கூறினேன். உண்மையிலேயே எங்களது பந்து வீச்சு மிக அபாரமாக இருந்தது” என்றார்.

பாகிஸ்தான் கேப்டன் பிஸ்மா மரூப் கூறுகையில், “இந்த இலக்கை நாங்கள் ‘சேசிங்’ செய்திருக்க வேண்டும். இந்தியாவை நாங்கள் 100 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பீல்டிங்கில் கணிசமான ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம்” என்றார்.

இந்த ஆசிய கோப்பையில் மொத்தம் 220 ரன்கள் (4 ஆட்டம்) குவித்து அசத்திய 34 வயதான மிதாலி ராஜ் ஆட்டநாயகி மற்றும் தொடர்நாயகி விருதை பெற்றார்.

மூலக்கதை