உலகமே எதிர்பார்த்த தேர்தல் முடிவில் பரபரப்பு - அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப் : கணிப்புகள் பொய்த்தது; ஹிலாரி பின்தங்கினார்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகமே எதிர்பார்த்த தேர்தல் முடிவில் பரபரப்பு  அமெரிக்க அதிபராகிறார் டிரம்ப் : கணிப்புகள் பொய்த்தது; ஹிலாரி பின்தங்கினார்


வாஷிங்டன், - உலகமே  ஆவலுடன் எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் பரபரப்பான திருப்பம் ஏற்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹிலாரி கிளிண்டன் ஆரம்பத்தில் வெற்றி முகம் காட்டினாலும், போகப் போக பின்தங்கினார்.

பெரும்பாலான மாகாணங்களில் குடியரசு கட்சி வேட்பாளர்  டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்திய நேரப்படி இன்று பகல் 12 மணி  அளவில் 276 இடங்களில் டிரம்ப்பும், 218 இடங்களில் ஹிலாரியும்  வெற்றி பெற்றுள்ளனர்.

இதனால், அதிபராக  டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிறது.  

்அமெரிக்காவில் புதிய  அதிபர், துணை அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்றது.

தற்போதைய அதிபர் பராக் ஒபாமா 2 முறை பதவியில் இருந்து  விட்டார். அமெரிக்க சட்டப்படி 3வது முறை அவர் போட்டியிட முடியாது.

இந்த  முறை ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி  ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி  சார்பில் டொனால்ட் டிரம்பும்  போட்டியிட்டனர். துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் டிம்  கெய்னும், குடியரசுக் கட்சி  சார்பில் மைக் பென்ஸும் போட்டியிட்டனர்.



 அதிபர் தேர்தலுடன் சேர்த்து 435  பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள்(எம்பிக்கள்), 34 செனட் உறுப்பினர்கள், 12  மாகாண கவர்னர்களின் தேர்தல்களும் நடத்தப்பட்டன. மொத்தம் 50  மாகாணங்களை கொண்ட அமெரிக்காவில் முன்கூட்டியே துவங்கிய வாக்குபதிவின் போது 4. 62 கோடி பேர் வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை தேர்தல் நடைபெற்றது.   வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது.

ஆரம்பத்தில் ஹிலாரியே முன்னிலை வகித்தார்.

அதனால், கருத்து கணிப்புகளில் கூறப்பட்டபடி அவரே அடுத்த அதிபராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் டிரம்ப்புக்கு ஆதரவாக சில மாகாணங்களில் வெற்றிகள் வரவே, இருவருக்கும் இடையே கடும் இழுபறி காணப்பட்டது.

அடுத்தடுத்த சுற்றுகளில் டிரம்ப்  படிப்படியாக முன்னிலை வகிக்கத் தொடங்கினார். இந்திய நேரப்படி காலை 7. 30 மணி அளிவில் இருவருக்கும் இடையே 68-66 தேர்வாளர்கள் கிடைத்தனர்.



தொடர்ந்து, புளோரிடா, ஒகியோ, வர்ஜினியா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சிக்கு வெற்றி கிடைத்தது. இதனால் 8. 30 மணி அளவில் ஹிலாரியை முந்திக்  கொண்டு டிரம்ப் 136-104 என்ற அளவில் முன்னிலை வகித்தார்.

மொத்தம் 270 தேர்வாளர்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் டிரம்ப் படிப்படியாக முன்னேறி வருகிறார். டெக்சாஸ், பென்சில்வேனியா மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றி முகம் காட்டியுள்ளார்.

இதையடுத்து, ‘வெள்ளை  மாளிகையை நோக்கி டிரம்ப் வெற்றி நடை போடுகிறார்’ என  அமெரிக்க ஊடகங்கள் செய்திகள்  வெளியிடத் தொடங்கியுள்ளன.

இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு டிரம்ப்புக்கு 276,  ஹிலாரிக்கு 218 தேர்வாளர்கள் கிடைத்துள்ளனர்.

இதன்படி அமெரிக்காவின் அடுத்த அதிபராக டிரம்ப் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. பிரதிநிதிகள் சபை உறுப்பினர்(எம்பி) தேர்தலிலும் குடியரசு கட்சிக்கு மெஜாரிட்டி கிடைத்துள்ளது.

அக்கட்சிக்கு 231 இடங்களும், ஜனநாயக கட்சிக்கு 175 இடங்களும் கிடைத்துள்ளன.

.

மூலக்கதை