ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி - அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு ; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு; நாளை முடிவு தெரியும்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹிலாரி கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் இடையே கடும் போட்டி  அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப்பதிவு ; மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு; நாளை முடிவு தெரியும்

வாஷிங்டன், - உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர், துணை அதிபர் தேர்தலில் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் விறுவிறுப்புடன் வாக்களித்து வருகின்றனர்.

அடுத்த அதிபர் ஹிலாரி கிளிண்டனா அல்லது டொனால்ட் டிரம்ப்பா என்பது நாளையே தெரிந்தாலும் ஜனவரி 20ம் தேதிதான் அதிபர் பதவியேற்பார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் என்றால் உலகம் முழுவதுமே அதை ஆவலுடன் கவனிப்பார்கள்.

அங்கு கடந்த பல ஆண்டுகளாக ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. தற்போது ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா 2 முறை பதவியில் இருந்து விட்டார்.

அமெரிக்க சட்டப்படி 3வது முறை அவர் போட்டியிட முடியாது. இந்த முறை ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி  சார்பில் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் கெய்னும், குடியரசுக் கட்சி  சார்பில் மைக் பென்ஸும் போட்டியிடுகின்றனர். இரு பதவிகளுக்கும் வேறு பலரும் போட்டியிடுகின்றனர்.

ஆனால், அவர்கள் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
எம்பிக்கள் தேர்தல் :அதிபர் மற்றும் துணை அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும். 35 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

குறைந்தது 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்திருக்க வேண்டும் என அந்நாட்டு சட்டத்தில் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.    அமெரிக்க அதிபர் தேர்தலுடன் சேர்த்து 435 பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள்(எம்பிக்கள்), 34 செனட் உறுப்பினர்கள், 12 மாகாண கவர்னர்களின் தேர்தல்களும் நடத்தப்படுகின்றனர். மொத்தம் 50 மாகாணங்களை கொண்ட அமெரிக்காவில் 14 கோடி 34 லட்சத்து 11 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர்.

வாக்குச்சீட்டு, இயந்திர வாக்குப்பதிவு என மாநிலத்துக்கு மாநிலம் தேர்தல் முறையும் மாறும்.

 அதே போல், முன்கூட்டியே வாக்களிக்கும் முறையும் உண்டு.

இதனால், கடந்த 2 மாதத்திற்கு முன்பே வாக்குப்பதிவு தொடங்கி விட்டது. எனினும், வாக்குப்பதிவு நாள்  என அறிவிக்கப்பட்டு, அமெரிக்க நேரப்படி இன்று காலை 6 மணி முதல் வாக்குச்சாவடிகள் அனைத்தும் திறக்கப்பட்டன.

மக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு முடியும் நேரமும் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

எனவே, இந்திய நேரப்படி நாளை அதிகாலை வரை வாக்குப்பதிவு நடக்கும்.  
 வாக்குப் பதிவு முடிவடைந்த உடனேயே வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணும்  மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும்.

நாளை மதியத்துக்குள் அடுத்த அமெரிக்க அதிபர் யார் என்பது தெரிந்து  விடும். இழுபறி நிலை ஏற்பட்டால் முடிவு தெரிய நாளை இரவு வரை ஆகலாம்.


ஜன. 20-ல் பதவியேற்பு :

 தேர்தலில் வெற்றி பெற்றது யார்? என்பது நாளையே தெரிந்து விடும் என்ற  போதிலும், டிசம்பர் 19ம் தேதிதான் தேர்வாளர் குழுவின் வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளது. அன்றுதான் அடுத்த அதிபர், அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்படுவார்.

2017ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர்  பதவியேற்று வெள்ளை மாளிகைக்குச் செல்வார். அப்போது நாட்டு மக்களுக்கு புதிய  அதிபர் முதல் உரையாற்றுவார்.

அதுவரை இப்போதைய அதிபர் ஒபாமா பதவியில்  இருப்பார். இதற்கிடையே, ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும்  நவ. 7ம் தேதி இரவு வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ஹிலாரி முன்னிலை :வெளியுறவு அமைச்சராக ஹிலாரி  பதவி வகித்தபோது, தனியார் இ-மெயில் சர்வரை அலுவலகப் பயன்பாட்டுக்''குப்  பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு இருந்தது.

இது பற்றி, அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப். பி. ஐ. விசாரித்து விடுவித்திருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் இது பற்றி எப். பி. ஐ மீண்டும் விசாரணையை தொடங்கியது. இதனால், கருத்து கணிப்புகளில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த ஹிலாரிக்கு சரிவு ஏற்பட்டது.

இந்நிலையில், இ-மெயில் குற்றச்சாட்டில் உரிய முகாந்திரம் இல்லாததால் அதிலிருந்து அவரை விடுவித்து விட்டதாக எப். பி. ஐ. நேற்று அறிவித்தது.   இது ஜனநாயகக் கட்சிக்கு கடைசி நேரத்தில் கைகொடுக்கிறது.



ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெற 65. 5 சதவீதம் வாய்ப்புள்ளதாக ‘பைவ் தேர்ட்டி எய்ட்’ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. எனினும், வேறொரு கருத்து கணிப்பில் ஹிலாரிக்கு 45. 9 சதவீதமும், டிரம்ப்புக்கு 42. 7 சதவீதமும் ஆதரவிருப்பதாக கூறியுள்ளது.

இதே பல கருத்து கணிப்புகளிலும் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டுள்ளன. அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகளில் அதிகம் பெற்றாலும் கூட, அதிபர் யார் என்பதை முடிவு செய்வது  தேர்வாளர் குழு வாக்குகள்தான்.

மொத்தமுள்ள 538  தேர்வாளர் குழு வாக்குகளில் வெற்றி பெற 270 தேர்வாளர் குழு வாக்குகள் தேவை. தேர்வாளர் குழுவின் வாக்கெடுப்பு டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் என்றாலும், மெஜாரிட்டி யாருக்கு கிடைக்கும் என்பது நாளையே தெரிந்து விடும்.



சரித்திரம் படைக்கும் தேர்தல்

இந்த முறை அதிபர் தேர்தல் முடிவு ஒரு புதிய சரித்திரத்தை படைக்கப் போகிறது. அதாவது, ஆளும் ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெற்றால், இவர்தான் முதல் பெண் அதிபர்.

அதே போல், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றால், அதிக வயதில்(70) அதிபரானவர் என்ற பெயரை பெறுவார். இதற்கு முன், ரீகன் 69வயதில் அதிபராகி இருந்தார்.

மேலும், எந்த பதவியிலும் இல்லாமல் நேரடியாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக டிரம்ப் இருப்பார். காரணம், இது வரை பிரதிநிதிகள் சபை உறுப்பினராகவோ, செனட்டராகவோ, கவர்னராகவோ பதவி வகித்தவர்கள் அல்லது ராணுவ தளபதியாக இருந்தவர்கள்தான் அதிபராக தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஹிலாரி கூட ஒபாமா அமைச்சரவையில் வெளியுறவு அமைச்சராக இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்விங் ஸ்டேட்ஸ்

அமெரிக்காவில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் இடையேதான் நேரடி போட்டி. மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்கள் தொடர்ந்து ஏதேனும் ஒரே கட்சிக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து வருகின்றன.

கலிபோர்னியா மாநிலம் என்றால் அது கடந்த 92ம் ஆண்டு வரை குடியரசு கட்சிக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது. 92க்கு பிறகு தொடர்ந்து ஜனநாயக கட்சிக்கு ஆதரவு அளித்து வந்துள்ளது.   சில மாநிலங்களில் ஒவ்வொரு தேர்தலிலும் நிலவும் சூழ்நிலைக்கு ஏற்ப கட்சி மாறி மக்கள் வாக்களிப்பதுண்டு.

இந்த மாநிலங்களைத்தான் ‘ஸ்விங் ஸ்டேட்ஸ்’ என்கிறார்கள். இந்த மாநிலங்கள்தான் அதிபர் தேர்தலில் பெரும்பாலும் வெற்றியை நிர்ணயிக்கின்றன.

இந்த தேர்தலில், புளோரிடா, ஒகியா, பென்சில்வேனியா உள்பட 11 மாநிலங்கள்தான் வெற்றியை நிர்ணயிக்கும் என்று சொல்லப்படுகிறது.


அதிபர் தேர்தல் நடைபெறும் முறை


அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களே நேரடியாக வாக்களித்து அதிபரை தேர்வு செய்வதில்லை. அதே போல், எம்பிக்கள் மூலமும் தேர்வு செய்யப்படுவதில்லை.

‘எலக்ட்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வுக் குழுவினர்தான், அதிபரை தேர்வு செய்கின்றனர். கட்சிகளின் சார்பில் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டதும், மாகாணம்தோறும் அவரது சார்பில் ‘தேர்வு குழுவுக்கு’ போட்டியிடுவோர் நியமிக்கப்படுவார்கள்.

இவர்களுக்கு மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் செனட்டர்களின் எண்ணிக்கையும் சேர்த்து எத்தனை உண்டோ, அத்தனை தேர்வுக்குழு உறுப்பினர்கள் அந்த மாகாணத்தில் தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்த அடிப்படையில் 435 பிரதிநிதிகள், 100 செனட்டர்கள் என சேர்க்கும் போது 535 ஆகிறது.

அத்துடன், கொலம்பியா மாவட்டத்தை ஒரு மாகாணமாக கருதி 3 தேர்வுக் குழு உறுப்பினர்கள் அளிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் 538 தேர்வுக் குழு உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்கிறார்கள்.

அவர்கள் டிசம்பர் மாதத்தில் 2வது புதன்கிழமைக்கு பின்பு வரும் திங்கட்கிழமை அன்று அதிபர், துணை அதிபரை தேர்ந்தெடுக்க வாக்களிப்பார்கள். இப்படித்தான் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.


அதன்படி, வரும் டிசம்பர் 19ம் தேதி அந்தந்த மாநிலங்களில் இருந்தவாறு அதிபர், துணை அதிபர் தேர்தலுக்கான வாக்குகளை தேர்வுக் குழுவினர் முறைப்படி பதிவு செய்வார்கள். இதன்பின், ஜனவரி 6ம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் சபை(காங்கிரஸ்), செனட் சபை ஆகியவற்றின் கூட்டு கூட்டம் நடைபெறும்.

அதற்கு முன்பாக, அதிபர், துணை அதிபர் தேர்தலுக்கான தேர்வு குழுவினரின் வாக்குகள் எண்ணப்படும். அத்துடன் தேர்வு குழுவினரின் பணி முடிந்து விடும்.

அதன்பின், அவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. ஒரு வேளை, தேர்வு குழு வாக்குகளில் மெஜாரிட்டியான 270 வாக்குகள் யாருக்கும் கிடைக்காவிட்டால், எம்பிக்கள் கூட்டத்தில் பலப்பரீட்சை நடத்தப்படும்.

இதன்பின், ஜனவரி 20ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்பார்கள்.

ஹிலாரி தொடர்ந்து முன்னிலை

பல்வேறு ஊடகங்கள் நவம்பர் 2ம்தேதி வரை வெளியிட்ட கருத்து கணிப்புகளில் ஹிலாரியே ெதாடர்ந்து முன்னிலை பெற்றுள்ளார்.   டி. பி. எம்.

போல் டிரக்கர் என்ற இதழ் கணிப்பில், 46. 7 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் 44. 8 சதவீத வாக்குகள் பெறுவார் என கூறப்பட்டுள்ளது.

ஐ. பி. டி / டி. ஐ. பி. பி. வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஹிலாரியும், டிரம்ப்பும் சமநிலையில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

ராஸ்முஸ்சென் ரிப்போட்ஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 45% வாக்குகளுடன் டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார். ஹிலாரிக்கு 42% வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.


பிபிசி கருத்துக் கணிப்பில் 48 சதவீத வாக்குகளுடன் ஹிலாரி முன்னிலை பெற்றிருந்தார். டிரம்ப்புக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

நியூ ஃபாக்ஸ் நியூஸ் சானல் நடத்திய கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது.   தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரம் மட்டுமே இருந்த நிலையில் வெளியான இந்த கணிப்பிலும் ஹிலாரி முன்னிலையில் இருந்தார். ஹிலாரிக்கு 48 சதவீதம், டிரம்பிற்கு 44 சதவீதம் பேர் ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

ஏற்கனவே இதே நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஹிலாரிக்கு 2 சதவீதம் மட்டுமே கூடுதலாக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.   ஹிலாரிக்கு பெண்கள், நகர்புறங்களில் வசிப்போர், அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டினர் மத்தியில் செல்வாக்கு உள்ளது. கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பழமைவாதிகள் டிரம்பை ஆதரிக்கின்றனர்.

இதனால், இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவி வருகிறது.

.

மூலக்கதை