ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இனி செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பு!

இன்று(நவம்பர்  08)  நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பாரத பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற டிசம்பர் 30 ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை(நவம்பர்  09) ஒரு நாள் மட்டும் வங்கிகள் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து ஏ.டி.எம். இயந்திரங்களும் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், இடுகாடுகள் ஆகிய இடங்களில் மட்டும் வரும் நவம்பர் 11ம் தேதி வரை ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என்றும், 2005 க்கு முன்பு வரை அச்சிட்ட நோட்டுக்களை மட்டும் மாற்றிக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரை சந்தித்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் பாரத பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். மேலும் புதிதாக 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டில் கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக, ஊழலுக்கு எதிரான போராக இது கருதப்படுவதாகவும் பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை வரும் 10 ம் தேதி முதல் மாற்றிக்கொள்ளவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக, நாளை ஒரு நாள் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் பண பரிவர்த்தனைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 50 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வங்கியில் பணம் மாற்றினால், அடையாள அட்டைக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறேன் என்றும் பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை