டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்


வாஷிங்டன், - அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தெற்கு கரோலினா கவர்னருமான நிக்கி ஹாலே இடம்பெறுவார் என தெரிகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதியன்று அதிபராக அவர் பதவியேற்க உள்ளார்.

தற்போது, தனது அரசின் கொள்கைகளை வகுப்பதிலும், புதிய அமைச்சரவை அமைப்பதிலும் டிரம்ப் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இதையொட்டி, பல்வேறு முக்கிய பிரமுகர்களையும், தனது அமைச்சரவையில் சேர்க்க விரும்புபவர்களையும் சந்தித்து வருகிறார் டிரம்ப்.

அமைச்சரவையில் இடம்பெறுவோர் பட்டியலை அதற்கென டிரம்ப் நியமித்த குழுவினர் தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே, டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெறுவார் என தெரிகிறது. தெற்கு கரோலினாவில் இரண்டாவது முறையாக கவர்னர் பதவி வகிக்கும் நிக்கி ஹாலேவை இன்று டிரம்ப் சந்திக்கிறார்.

எனவே, நிக்கி ஹாலே அமைச்சராகும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தனது அமைச்சரவையில் திறமையானவர்கள் இடம்பெற வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.

இந்நிலையில், 44 வயதான நிக்கி, அமைச்சரவையில் இடம்பெறுவதை பலரும் வரவேற்றுள்ளனர்.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், லூசியானா முன்னாள் கவர்னருமான பாபி ஜின்டாலும் டிரம்ப் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை