நான்கு நாட்களில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் மத்திய பொருளாதாரத் துறை தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நான்கு நாட்களில் மட்டும் ரூ.3 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் மத்திய பொருளாதாரத் துறை தகவல்

புதுடெல்லி: 500, 1000 கரன்சி வாபஸ் அறிவிப்புக்கு பிறகு, கடந்த 4 நாட்களில் வங்கிகளில் ரூ. 3 லட்சம் கோடிக்கு பழைய கரன்சிகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என மத்திய பொருளாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய பொருளாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நவம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி  மாலை 5 மணி வரை, வங்கிகளில் ரூ. 500, ரூ. 1000 நோட்டுகளாக மொத்தம் 3 லட்சம் கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

வங்கிகள் மூலமாக ரூ. 50 ஆயிரம் கோடி மாற்று கரன்சிகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளது.

மாற்று கரன்சி நோட்டுகளை மக்களுக்கு தட்டுப்பாடில்லாமல் வினியோகிக்க வேண்டும் என வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

எந்நேரமும் நோட்டுகள் கையிருப்பை உறுதி செய்து கொண்டு மக்களுக்கு வினியோகிக்க வேண்டும்.

கிராமப்புற வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் கரன்சி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உன்னிப்பாக கவனித்து அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளோம். காசோலை, டிடி, ஆன்லைன் பரிவர்த்தனையை மறுக்கும் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவை மீது மாவட்ட கலெக்டரிடம் மக்கள் புகார் அளிக்கலாம்.

பணத்தை மாற்றிக் கொள்ள வரும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசையை ஏற்படுத்திக் கொடுக்க வங்கிளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் கரன்சிகள் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கும்.



வங்கி கணக்கில் இருந்து அடையாள அட்டை காட்டி பணம் பெறுவது ரூ. 4000ல் இருந்து ரூ. 4500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் இருந்து பணம் பெறும் வசதியும் ரூ. 2000 லிருந்து 2500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கில் இருந்து ஒரு வாரத்திற்கு எடுக்கப்படும் பணத்தின் உச்ச வரம்பு ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ. 24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், ஒரு நாளில் ரூ. 10 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற உச்ச வரம்பும் நீக்கப்படுவதால், ஒரே நாளில் 24 ஆயிரத்தை எடுக்கலாம்.

மொபைல் பேங்கிங் வசதி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற ஆன் லைன் பரிமாற்ற வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அதிகமாக வழங்கும்படி வங்கிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் வங்கிகளுக்கு கொடுக்க வேண்டிய ‘உயிர் சான்றிதழை’ சமர்ப்பிக்கும் காலக்கெடு 2017 ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை