அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி - டிரம்ப் இடையே கடும் போட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி  டிரம்ப் இடையே கடும் போட்டி


நியூயார்க், - அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி, டிரம்ப் ஆகியோர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் படுவேகமாக முந்திய ஹிலாரி தற்போது சரிவை கண்டுள்ளார்.

கடைசியாக நடந்த ஆய்வில் இருவருக்கும் இடையே ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே வித்தியாசம் இருப்பதாக  தெரிய வந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 8ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் டிரம்பும் களத்தில் உள்ளனர்.

தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர்கள் ஒரே மேடையில் நேருக்கு நேர் மோதுவதுண்டு.

அந்த மேடை பேச்சு முடிந்ததும் வாக்கெடுப்பும் நடத்தப்படும். ஆரம்பத்தில் ஹிலாரி, டிரம்ப் இடையே நடைபெற்ற கருத்து மோதல்களில் ஹிலாரியே அதிக வாக்குகள் பெற்று முந்தினார்.

சர்ச்சைக்குரிய கருத்துக்கள், பாலியல் புகார்கள் போன்றவற்றால் டிரம்பின் செல்வாக்கு சரிந்திருந்தது.

ஆனால், தற்போது இருவருக்கும் போட்டி கடுமையாகி விட்டது. டிரம்பை விட ஹிலாரி ஒரு சதவீத வாக்குகள் மட்டுமே முன்னிலையில் உள்ளதாக நேற்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹிலாரிக்கு 46 சதவீத வாக்குகளும், டிரம்புக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கரோலினாவில் டிரம்புக்கு செல்வாக்கு உள்ளது.

புளோரிடாவில் ஹிலாரிக்கு சற்று கூடுதல் செல்வாக்கு இருந்தாலும், இங்கு கடும் போட்டி இருக்கும் என தெரிகிறது.
ஹிலாரி வெளியுறவு அமைச்சராக இருந்த போது தனிப்பட்ட மெயில் மூலம் அரசு ரகசியங்களை பரிமாற்றம் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது.

அதை தற்போது அமெரிக்க புலனாய்வு நிறுவனம் விசாரிக்கிறது. இதன் காரணமாக, ஹிலாரியின் செல்வாக்கு தற்போது சரிந்துள்ளது.



.

மூலக்கதை