100 பேரை பிணையாக பிடித்தனர் பிரேசில் சிறையில் பயங்கர கலவரம் - 25 கைதிகள் அடித்து கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
100 பேரை பிணையாக பிடித்தனர் பிரேசில் சிறையில் பயங்கர கலவரம்  25 கைதிகள் அடித்து கொலை


சாவ் பாவ்லோ, -பிரேசில் நாட்டில் உள்ள சிறையில் கைதிகள் இடைேய பயங்கர மோதல் ஏற்பட்டது. கலவரத்தில் 25 கைதிகள் கொல்லப்பட்டனர்.

மேலும், கைதிகளை சந்திக்க வந்திருந்த உறவினர்கள் 100 பேரை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ரோரைமா மாகாணத்தில் போவா விஸ்டா என்ற இடத்தில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று சிறையில் ஒரு பிரிவில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள், மற்றொரு பிரிவின் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் கைதிகள் 25 பேர் கழுத்தறுக்கப்பட்டும், அடித்தும் கொல்லப்பட்டனர். மேலும், சிறையின் ஒரு பகுதியில் தீ வைத்தனர்.

தொடர்ந்து அங்கு வன்முறை சம்பவங்கள் நடைபெற்றதால் அதிரடி போலீசார் குவிக்கப்பட்டனர்.

 இதற்கிடைேய, கைதிகளை பார்க்க வந்திருந்த உறவினர்கள் 100 பேரை பிணை கைதிகளாக, சிறைக் கைதிகள் பிடித்தனர். ‘‘நீதிபதி வந்து எங்களது கோரிக்கையை கேட்டால்தான் பிணை கைதிகளை விடுவிப்போம்’’ என அவர்கள் மிரட்டல் விடுத்தனர்.

ஆனால் அங்கு வந்த அதிரடி படையினர் சிறையை உடைத்து உள்ளே புகுந்து கைதிகள் மீது அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து பிணையாக பிடிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

மூலக்கதை