தனியார் குடோனில் இருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள்...

தினத்தந்தி  தினத்தந்தி
தனியார் குடோனில் இருந்த ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள்...

செங்குன்றம் அருகே தனியார் குடோனில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

லாரியில் ஏற்றினர்

செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகே தனியாருக்கு சொந்தமான குடோன் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த குடோனில் இருந்து புகையிலை பொருட்களை மினி லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து செங்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேந்தர் தலைமையிலான போலீசார் அந்த குடோனில் சோதணை செய்தனர். அப்போது அங்கு 100–க்கும் மேற்பட்ட மூட்டைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.10 லட்சம் மதிப்பிலான...

விசாரணையில், இந்த குடோனுக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதும், பின்னர் மினி லாரிகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய மினி லாரி டிரைவரையும், அங்கு இருந்தவர்களையும் தேடி வருகின்றனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த செங்குன்றம் போலீசார் குடோன் உரிமையாளர் யார்? என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.10 லட்சம் என கூறப்படுகிறது.

மூலக்கதை