ஆவடி அருகே, ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல்...

தினத்தந்தி  தினத்தந்தி
ஆவடி அருகே, ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல்...

ஆவடி அருகே ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.42 லட்சம் கையாடல் செய்துவிட்டு தலைமறைவான ஊழியரை 4 மாதங்களுக்கு பின்பு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

சென்னை நந்தனத்தில் ‘ரைட்டர்ஸ் சேப் கார்ட்’ என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதன் மூலம் வங்கிகளில் பணத்தை பெற்று ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணம் நிரப்புவார்கள். இதில் பொறுப்பாளராக ஆவடி ஜே.பி. எஸ்டேட் சரஸ்வதி நகரை சேர்ந்த டில்லிகுமார் (வயது 34) என்பவர் 9 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.

இவர், அன்றாடம் காலை நிறுவனத்துக்கு சென்ற பின்னர் இவரிடம் அந்த நிறுவனம் பணத்தை கொடுத்து சென்னை கொரட்டூர் முதல் திருவள்ளூர் வரை அந்த நிறுவன அதிகாரிகள் சொல்கிற ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று பணத்தை நிரப்பி வந்தார். இவருடன் ஒரு பாதுகாவலரும் வேன் டிரைவரும் செல்வார்கள்.

ரூ.42 லட்சம் கையாடல்

அப்படி நிரப்பப்பட்ட பணம் எவ்வளவு எடுக்கப்பட்டு உள்ளது, மீதம் எவ்வளவு பணம் இருக்கிறது என்று மாதம் ஒரு முறை அதிகாரிகள் வந்து தணிக்கை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆவடி டேங்க் பேக்டரி பகுதியில் உள்ள 3 ஏ.டி.எம். எந்திரங்களில் அதிகாரிகள் வந்து சோதனை செய்தபோது சுமார் ரூ.42 லட்சம் பணம் கையாடல் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பிய டில்லிகுமாரிடம் அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்தனர். அப்போது திடீரென அவர் தலைமறைவாகி விட்டார். இதனால் நிறுவன அதிகாரிகளுக்கு டில்லிகுமார் மீது சந்தேகம் ஏற்பட்டது.

4 மாதத்துக்கு பின்பு கைது

இதையடுத்து தனியார் நிறுவன மேலாளர் முரளி (35) ஆவடி டேங்க் பேக்டரி போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் துணை கமிஷனர் சுதாகர் உத்தரவின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, சப்–இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் டில்லிகுமாரை பல இடங்களில் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை ஆவடி பஸ் நிலையம் அருகே மனைவி, குழந்தைகளை பார்ப்பதற்காக டில்லிகுமார் வந்தார். அப்போது அவரை ரகசியமாக கண்காணித்த தனிப்படை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவரை 4 மாதத்துக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் டில்லி குமாரை, ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். அப்போது போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் தெரிவித்தார். அதுபற்றி போலீசார் கூறியதாவது:–

மேலும் ரூ.27 லட்சம்

பல வருடங்களாக இந்த நிறுவனத்தில் டில்லிகுமார் வேலை செய்து வந்ததால் அவர் மட்டும் தான் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்புவார். அப்போது மற்றவர்கள் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள். அதேபோல் அவருக்கு மட்டுமே ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் போடுவதும் எடுப்பதற்குமான ரகசிய எண் தெரியும்.

எனவே பணத்தை நிரப்பி விட்டு சென்ற பின்னர் அவரே திரும்ப வந்து ரகசிய எண்ணை பயன்படுத்தி பணத்தை கையாடல் செய்துள்ளார். ஆவடி பகுதியில் மட்டும் 3 ஏ.டி.எம். எந்திரங்களில் இதுபோல் ரூ.42 லட்சம் கையாடல் செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுதவிர, திருவள்ளூரில் உள்ள 4 ஏ.டி.எம். எந்திரங்களில் இருந்து சுமார் ரூ.27 லட்சம் வரை கையாடல் செய்து இருப்பதாகவும் டில்லிகுமார் தெரிவித்து இருக்கிறார். இதுபற்றியும் விரிவாக விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதையடுத்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் டில்லிகுமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

மூலக்கதை