ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி...

தினத்தந்தி  தினத்தந்தி
ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதி எலக்ட்ரீசியன் பலி...

ஆலந்தூர்,

ஆதம்பாக்கத்தில் டிப்பர் லாரி மோதியதில் எலக்ட்ரீசியன் பலியானார். அப்பகுதியில் வேகத்தடை அமைக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

லாரி மோதி பலி

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மோகன் (வயது 50). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கரணையில் இருந்து ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது கிண்டி நோக்கி சென்ற டிப்பர் லாரி மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த மோகன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சாலை மறியல்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பரங்கிமலை போக்குவரத்து பிரிவு உதவி கமிஷனர் கோபால், இன்ஸ்பெக்டர் வேல்மணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் ஜெனனன், ஸ்டாலின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கிண்டி–ஆதம்பாக்கம் இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டிரைவருக்கு வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், வேகத்தடை அமைப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் விபத்து குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

மூலக்கதை