சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் சாவு 3 பேர் உயிர் தப்பினர்

தினத்தந்தி  தினத்தந்தி
சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் 19 பேர் சாவு 3 பேர் உயிர் தப்பினர்

சைபீரியாவில் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்பு படையினர், பணியில் ஈடுபட்டிருந்த காட்சி.

நோவி உரெங்கோய்,

சைபீரியாவில் கிராஸ்நோயர்ஸ்க் நகரில் இருந்து நோவி உரெங்கோய் நகருக்கு எண்ணெய் நிறுவன அதிகாரிகள், நேற்றுமுன்தினம் ‘எம்.ஐ.8’ ரக ஹெலிகாப்டரில் சென்றனர்.

மொத்தம் 22 பேருடன் புறப்பட்டு சென்ற அந்த ஹெலிகாப்டர், பகல் 2 மணிக்கு நோவி உரெங்கோய் நகருக்கு வெளியே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் உடல் சிதைந்து உயிரிழந்தனர். அவர்களில் ஹெலிகாப்டர் சிப்பந்திகள் 3 பேரும் அடங்குவார்கள்.

அதே நேரத்தில் 3 பேர் காயங்களுடன் உயிர் தப்பினர். உயிர்தப்பிய ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு விபத்து குறித்து தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு மீட்பு படையினர் விரைந்தனர்.

அவர்கள் முதலில் இடிபாடுகளுக்கு இடையே படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 பேரை மீட்டு, நோவி உரெங்கோய் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்துக்கு காரணம் எந்திர கோளாறு அல்லது மோசமான வானிலையாக இருக்கக்கூடும் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டும் இதேபோன்று அங்கு இகர்கா நகருக்கு வெளியே ஒரு ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 15 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

மூலக்கதை