அம்மா திட்ட முகாமில் பேனர் வைத்தது தொடர்பாக தி.மு.க.,...

தினத்தந்தி  தினத்தந்தி
அம்மா திட்ட முகாமில் பேனர் வைத்தது தொடர்பாக தி.மு.க.,...

செங்குன்றம் அருகே அம்மா திட்ட முகாமில் பேனர் வைத்தது தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனால் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இரு கட்சிகளின் பேனர்கள்

செங்குன்றத்தை அடுத்த மாதவரம் மண்டலம் 28–வது வார்டில் உள்ள பெரியசேக்காடு அரசு ஆரம்ப பள்ளியில் நேற்று அம்மா திட்ட முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக பள்ளியின் நுழைவுவாயிலில் தி.மு.க. தரப்பில் ஒரு பேனரும், அ.தி.மு.க தரப்பில் ஒரு பேனரும் வைக்கப்பட்டு இருந்தது.

அம்மா திட்ட முகாமை தொடங்கிவைக்க மாதவரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம் தனது கட்சியினர் 25–க்கும் மேற்பட்டோருடன் அங்கு வந்தார். இதே போல் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் எஸ்.மனோகரன் தலைமையில் 20–க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர்.

நாற்காலிகளை வீசினார்கள்

இது அரசு நிகழ்ச்சி. எப்படி தி.மு.க பேனரை வைக்கலாம் என அக்கட்சியினரிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்தனர். அதற்கு தி.மு.க.வினர் நீங்கள் மட்டும் உங்களது கட்சியின் பேனரை ஏன் வைத்துள்ளீர்கள்? என கேட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

இதனால் இருதரப்பினரும் அங்கு வைக்கப்பட்டு இருந்த நாற்காலிகளை தூக்கி வீசினார்கள். அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்ததால் முகாமில் மனு கொடுக்க வந்த முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினார்கள்.

கேட்டாட்சியர் பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாதவரம் துணை கமிஷனர் ஜெயசுப்பிரமணி, இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், அம்பத்தூர் கோட்டாட்சியர் வீரப்பன் சம்பவ இடத்திற்கு சென்று மோதலில் ஈடுபட்ட இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்பு கோட்டாட்சியர் தி.மு.க., அ.தி.மு.க.வினரின் 2 பேனர்களையும் அகற்ற உத்தரவிட்டதால் வருவாய் துறையினர் அந்த பேனர்களை அகற்றினர். இதனால் அம்மா திட்ட முகாம் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

வெயிலில் காத்திருந்த பொதுமக்கள்

மனு கொடுக்க வந்த பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடும் வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின்னர் நண்பகல் 1.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அம்மா திட்ட முகாம் தொடங்கியது. பட்டா மாற்றம், முதியோர் உதவி தொகை, சாதி சான்றிதழ் உள்பட 150 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.

இதில் மாதவரம் தாசில்தார் முருகானந்தம், வருவாய் ஆய்வாளர் வெற்றிகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


மூலக்கதை