குடியிருப்பு பகுதியில் அகர்பத்தி உற்பத்தி: மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு...

தினத்தந்தி  தினத்தந்தி
குடியிருப்பு பகுதியில் அகர்பத்தி உற்பத்தி: மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு...

சென்னை,

குடியிருப்பு பகுதியில் அகர்பத்தி உற்பத்தி செய்யப்படுவது தொடர்பான வழக்கில், மாசுகட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சுகாதாரக்கேடு

தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேலூர் சோளிங்கர் மேற்கு போர்டின்பேட்டை சேர்ந்த கே.ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நான் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். சோளிங்கர் மேற்கு போர்டின்பேட், வள்ளுவர் தெருவில் வசிக்கிறேன். எங்கள் தெருவில் சம்பத் என்பவர் அகர்பத்தி உற்பத்தி செய்து வருகிறார்.

இதனால் மரத்தூள் மற்றும் கார்பன் தூள் பரவி காற்று மாசுபடுகிறது. இதனால் சுவாசப்பிரச்சினை உள்ளிட்ட சுகாதாரக்கேடுகள் அந்தப்பகுதி மக்களுக்கு ஏற்படுகின்றன. பஞ்சாயத்து சட்டப்படி குடியிருப்புப் பகுதியில் அதுபோன்ற தொழிலை யாரும் நடத்தக்கூடாது.

ஏற்கனவே வழக்கு

இதுசம்பந்தமாக சோளிங்கர் தேர்வு நிலை பேரூராட்சி செயல் அதிகாரி, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரிடம் புகார் கொடுத்தோம். சம்பத்துக்கு அவர்கள் நோட்டீசு அளித்தனர். ஆனாலும் அவர்களின் அறிவுரையைக் கேட்காமல் அகர்பத்தி உற்பத்தியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

கடந்த 2014–ம் ஆண்டு இதுதொடர்பாக ஏற்கனவே இந்த தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகர்பத்தி உற்பத்தி செய்வதற்கு செயல் அதிகாரி அனுமதி அளிக்கக்கூடாது என்றும் அனுமதி பெறாமல் சம்பத் அந்தத் தொழிலை அங்கு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.

நிறுத்தவேண்டும்

ஆனால் அப்போது தீர்ப்பாயத்தில் கொடுத்த உத்தரவாதத்தை நிறைவேற்றாமலும், அனுமதி பெறாமலும் மீண்டும் அகர்பத்தி உற்பத்தியை அந்தத் தெருவில் நடத்தி வருகிறார்.

எனவே, அந்தத் தொழிலை நடத்துவதை நிறுத்த உத்தரவிடவேண்டும். குடியிருப்பு அல்லாத வேறு பகுதிக்கு அந்தத் தொழிலை மாற்ற உத்தரவிடவேண்டும். தீர்ப்பாயத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறிய குற்றத்துக்காக சம்பத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மீண்டும் ஆய்வு

இந்த உத்தரவை தீர்ப்பாய உறுப்பினர்கள் நீதிபதி பி.ஜோதிமணி, பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–

இந்த வழக்கில் மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதில் மனு தாக்கல் செய்து, அங்கு 28.4.16 அன்று ஆய்வு நடத்தியதாகக் கூறியுள்ளது. அந்த இடத்தில் சிலர் பணியாற்றியதாக மனுவில் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால் இந்த தீர்ப்பாயம் ஒரு முடிவுக்கு வரும் வகையில், அகர்பத்தி உற்பத்தி தொடர்பாக என்ன பணி நடந்தது? என்பதை சரிவர மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கவில்லை.

எனவே, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அங்கு மீண்டும் போய் புதிதாக சோதனை மேற்கொள்ளவேண்டும். எப்படிப்பட்ட பணி அங்கு நடக்கிறது? என்பதையும், அது சுற்றுச்சூழலுக்கு எந்த வகையில் பாதிக்கக்கூடியது? என்பது பற்றியும் மனு தாக்கல் செய்யவேண்டும். வழக்கு விசாரணை நவம்பர் 21–ந்தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை