தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் 3 தொகுதி தேர்தலை மக்கள் நலக்கூட்டணி...

தினத்தந்தி  தினத்தந்தி
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் 3 தொகுதி தேர்தலை மக்கள் நலக்கூட்டணி...

சென்னை,

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக்கூட்டணி புறக்கணிப்பதாகவும், தி.மு.க. கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்திலும் பங்கேற்காது என்றும் வைகோ அறிவித்து உள்ளார்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ம.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமைக் கழக செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

கூட்டம் முடிந்து வெளியில் வந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:–

3 தொகுதி தேர்தலில் பங்கேற்காது

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகள் தேர்தல் குறித்து கடந்த 21–ந் தேதி டெல்லியில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகமான அஜய் பவனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் நான் எங்களுக்குள் இசைவான கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம்.

தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளில் பணம் வெள்ளமாக பாய்ந்தது. 2 கட்சிகளும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது நிரூபிக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இப்போது 2 கட்சிகளிலும், அதே வேட்பாளர்கள் போட்டியிடுவது ஏற்படையது அல்ல. இதனால், அங்கு நியாயமான தேர்தல் நடைபெறப்போவதில்லை. ஜனநாயகத்துக்கு அடையாளமாக தேர்தல் நடைபெறாது. அந்த 2 தொகுதிகளை போன்றே திருப்பரங்குன்றத்திலும் நடைபெறும். எனவே 3 தொகுதிகளின் தேர்தல்களிலும் மக்கள் நலக்கூட்டணி பங்கேற்காது என முடிவு செய்துள்ளோம்.

அனைத்துக்கட்சி கூட்டம் புறக்கணிப்பு

அடுத்ததாக, தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் காவிரி பிரச்சினைக்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை அக்டோபர் 25–ந் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடத்துவதாக அழைப்பு விடுத்துள்ளார். ம.தி.மு.க.வுக்கும் அழைப்பு கடிதம் வந்துள்ளது. ஆனால், இன்று அதாவது (நேற்று) சிங்கபெருமாள் கோவிலில், அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், பா.ம.க., காங்கிரஸ், தே.மு.தி.க., ம.தி.மு.க. என பல்வேறு கட்சிகளில் இருந்து 10 ஆயிரம் பேர் தி.மு.க.வில் இணையப் போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் மற்றும் அறிக்கைகள் வெளிவந்துள்ளன.

கடந்த 1½ மாதமாக தினந்தோறும் 20 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேரை சேர்க்கிறோம் என்று கூறி, அண்ணா சொன்ன கண்ணியத்துக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வரும் தி.மு.க.வுக்கு அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுகிற தார்மீக தகுதி கிடையாது. எனவே, அனைத்துக் கட்சி கூட்டத்திலும் மக்கள் நலக்கூட்டணி கலந்து கொள்ளாது.

மீத்தேன் திட்டம்

முதல்–அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் முதல் ஆளாக முதல்–அமைச்சர் பூரண நலம் பெற்று பணியை தொடர வரவேண்டும் என வாழ்த்து தெரிவித்துவிட்டு, இப்போது அக்கட்சியில் இருந்து ஆட்களை சேர்ப்பது, எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை ஆதாயம் என்பதை போன்றது.

காவிரி பிரச்சினையை பொறுத்தவரை, 4½ ஆண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தி.மு.க. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. காவிரி பிரச்சினை மட்டுமல்ல, மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து இட்டது, இதே மு.க.ஸ்டாலின் தான். காவிரி பிரச்சினைக்காக இவர்கள் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டுவது ஊரை ஏமாற்றும் வேலை. எனவே இதில் கலந்து கொள்ள போவதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை