வசனம் எழுத மறுத்த முரசொலிமாறன்

தினத்தந்தி  தினத்தந்தி
வசனம் எழுத மறுத்த முரசொலிமாறன்

ரு வார்த்தையில் அப்பச்சி கொடுத்த சர்டிபிகேட், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. அதே நேரத்தில், ஒரு வருந்தத்தக்க விஷயமும் நடந்தது. அந்த விஷயம் என்னுடைய படிப்பு. இரண்டாவது முறையாக நான் எழுதியிருந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்விலும் தோல்வியைத் தழுவியிருந்தேன்.

இனிமேல் படிப்புக்கும் நமக்கும் ஒத்துவராது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நேராக அப்பச்சியிடம் சென்றேன். ‘அப்பச்சி! நான் படிப்பை நிறுத்திக் கொள்கிறேன்’.

‘ஏன்?’

‘இல்லை அப்பச்சி.. நான் மறுபடியும் படித்து தேர்வு எழுதினாலும் தேர்ச்சி பெறுவேன் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. எஸ்.எஸ்.எல்.சி. முடித்ததும் பி.யு.சி., அதன்பிறகு டிகிரி என படித்து முடித்தாலும் இறுதியில் நான் ஸ்டூடியோவுக்குத் தானே வரப்போகிறேன். அதனால் வேலையை இப்படியே தொடர்ந்து பார்க்கிறதுதான் சரின்னு தோணுது’ என்றேன்.

அப்பச்சியும், ‘சரி.. அப்படியே செய்’ என்று கூறிவிட்டார்.

படிப்பு விஷயம் முடிந்து பணிகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கி விட்டேன்.

ஏவி.எம். அண்ட் கர்நாடகா பிலிம்ஸ் என்ற பெயரில் ‘சகோதரி’ படத்தை எடுத்தோம். இந்தப் படத்தின் மூலம் தான் எங்கள் நிறுவனத்திற்குள் நுழைந்தார் டைரக்டர் ஏ.பீம்சிங். எங்களுக்கு பீம்சிங்கை ஏற்கனவே தெரியும் என்றாலும், அவர் எங்கள் நிறுவனத்தில் நுழைந்தது ‘சகோதரி’ படம் வாயிலாகத்தான்.

இந்தப் படத்திற்கு இசை, சுதர்சனம் மாஸ்டர். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். படத்திற்கான வசனத்தை எழுதியவர் ‘முரசொலி’ மாறன்.

‘சகோதரி’ திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டும் என்று அவரை நாங்கள் அணுகியபோது, முதலில் அவர் மறுத்து விட்டார். அதற்கு ஒரு காரணம் இருந்தது. ‘மேகலா பிக்சர்ஸ்’ என்ற பெயரில் மாறன் சொந்தப் பட நிறுவனம் வைத்திருந்தார். அந்த நிறுவனம் சார்பில் ‘குறவஞ்சி’ என்ற படத்தைத் தயாரிக்க முடிவு செய்து, அதில் நடிகை ராஜ சுலோச்சனாவை ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ராஜசுலோச்சனா அதில் நடிக்கவில்லை.

இந்த நிலையில் ‘சகோதரி படத்தில் ராஜசுலோச்சனா நடிக்கிறார்’ என்று அறிந்ததும், ‘இந்தப் படத்திற்கு என்னால் வசனம் எழுத முடியாது’ என்று மாறன் மறுத்து விட்டார். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

கிருஷ்ணன்– பஞ்சு இயக்குனர்களில், கிருஷ்ணனின் தங்கையைத்தான், பீம்சிங் திருமணம் செய்திருந்தார். எனவே கிருஷ்ணனை அழைத்த பீம்சிங், ‘நீங்கள் போய் கலைஞர் கருணாநிதியை சந்தித்து இதுதொடர்பாக பேசுங்கள்’ என்று கூறியிருக்கிறார். அவரும், கலைஞர் கருணாநிதியை சந்தித்து நிலைமையை விளக்கினார். ‘பரவாயில்லை.. நீ போய் வசனம் எழுது’ என்று கலைஞர் கருணாநிதி கூறியபிறகுதான் முரசொலி மாறன், சகோதரி திரைப் படத்திற்கு வசனம் எழுதினார். 11.12.1959–ல் வெளியான இந்தத் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது.

இந்தப் படத்தில் நடித்திருந்த தேவிகாவை, ‘பிரசிடென்ட் பஞ்சாட்சரம்’ என்ற நாடகத்தில் பார்த்தோம். அவரது நடிப்பைப் பார்த்து, சினிமாவில் நடிக்க வைக்கலாம் என்று கருதி அவரிடம் கேட்டோம். அவர் சரி என்றதும், ஒப்பந்தம் போடும் போதே, தொடர்ந்து மூன்று படங்களுக்கு என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம். இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ஒப்பந்தம். மூவாயிரத்து ஐநூறு, நாலாயிரத்து ஐநூறு என்று அடுத்தடுத்து இரண்டு ஒப்பந்தங்கள். ரூ.2,500 சம்பளத்தில் ‘சகோதரி’ திரைப்படத்தில் நடித்தார். ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் 3,500 ரூபாய், ‘பாவ மன்னிப்பு’ படத்தில் ரூ.4,500. இந்த மூன்று படங்களுக்குப் பிறகு தேவிகா, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறியிருந்தார்.

சகோதரி படத்தின் வாயிலாக எனக்கு பாலாஜியின் நட்பு கிடைத்தது. முனிரத்தினம் என்ற நண்பரின் மூலமாகத்தான் அவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் 963 பதிவு எண் கொண்ட அம்பாசிடர் கார் வைத்திருந்தார். சிவப்பு நிறத்தில் இருந்த அந்தக் காரை, ஒரு பயர் என்ஜினைப் போல் மிகவேகமாக ஓட்டிக்கொண்டு வருவார். எங்கள் நட்பு நெருக்கமானபோது, அவருக்கு நான் ஒரு பாமரேனியன் நாய்க்குட்டியை அன்பளிப்பாகக் கொடுத்தேன். அதை மிகவும் நேசத்துடன் பராமரித்து வந்தார். அது பாலாஜியின் அம்மாவிடம் நன்றாக ஒட்டிக்கொண்டது. பாலாஜியின் தாயார் இறந்ததும், அந்த நாயும் இறந்து போனது. ‘சகோதரி’ படம் வெளியான போது, அதற்கான விமர்சனம் பத்திரிகைகளில் வந்தது. ‘பாலாஜி, சிவாஜியை இமிடேட் செய்கிறார்’ என்று எழுதியிருந்தனர். அதைப் படித்து விட்டு பாலாஜி வருந்தியது, இன்றும் என் முன்பு நிழலாடுகிறது.

லாபத்தை  அள்ளிக் கொடுத்த ‘பர்க்கா’

இந்தியில் ஒரு சின்ன பட்ஜெட் படம் எடுக்க முடிவு செய்தோம். ஏ.கே.வேலன் தயாரிப்பில் தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘தை பிறந்தால் வழிபிறக்கும்’ என்ற படத்தை, இந்தியில் எடுக்க முடிவானது. தமிழ்படத்தில் இல்லாத ‘காளை அடக்கும் காட்சி’ ஒன்றை, இந்திப் படமான ‘பர்க்கா’வில் சேர்த்தோம். அந்தக் காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக ‘என்ன செய்யலாம்?’ என்று யோசித்தோம்.

விலங்குகளை வைத்து காட்சிகளை அமைப்பதில், சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்ப தேவர்தான் திறமை படைத்தவராக இருந்தார். அவர் தன் படங்களுக்கென்று இரண்டு மாடுகளை வளர்த்து வந்தார். அதில் ஒன்று சாது; மற்றொன்று முரடு. ஆனால் பார்ப்பதற்கு இரண்டும் ஒரே மாதிரியாக காணப்படும். உன்னிப்பாக கவனித்தால்தான் தெரியும், சாதுவான மாட்டுக்கு கொம்பின் நீளம் சற்று குறைவு என்பது. சின்னப்ப தேவர், சாதுவான மாட்டின் கொம்பின் மீது அதே போன்ற ஒரு உறையை போட்டு, முரட்டு மாட்டின் கொம்பு போலவே மாற்றிவைத்திருந்தார்.

அவர் தன்னுடைய மாடுகளை வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை என்பதை நான் அறிவேன். அந்த மாடுகள் கிடைத்தால், காட்சி அமைப்பு சரியாக வரும் என்று எனக்கு தோன்றியதால், அவரிடம் சென்று கேட்டேன். மறுப்பு ஏதும் கூறாமல் அந்த இரண்டு மாடுகளையும் படப்பிடிப்புக்காக என்னிடம் தந்தார். ‘பர்க்கா’ படத்தில் இடம்பெற்ற காளை சண்டைக் காட்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு, அந்த இரண்டு மாடுகள்தான் காரணமாக அமைந்தன.

இந்தப் படத்தில் ஜெகதீப் என்பவர் கதாநாயகனாக நடித்தார். அவருக்கு நாங்கள் அளித்த சம்பளம் ரூ.750. கதாநாயகியாக நடித்த நந்தா என்பவருக்கு ரூ.15 ஆயிரம் சம்பளம். இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற சித்திரகுப்தா இசையமைத்திருந்தார். வசனம்: ராஜேந்திரகிஷண். 1.1.1960–ல் வெளியான இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்திற்கான எங்களது தயாரிப்பு செலவு ரூ.5 லட்சம். ஆனால் அந்தப்படம் எங்களுக்கு ரூ.35 லட்சத்தை அள்ளித்தந்தது.

அப்பச்சி தந்த அடையாளம்


முரசொலி மாறனுக்கு, ‘முரசொலி’ என்ற அடைமொழியைத் தந்தவர் அப்பச்சிதான். 1956–ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29–ந் தேதி ஏவி.எம். அண்ட் எஸ்.கே.பிக்சர்ஸ் கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்த படம் ‘குலதெய்வம்’. இந்தப் படத்தின் வசனங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. ‘வசனம் எழுதியது யார்?’ என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தனர். இதனால் அடுத்த வாரம் வெளியிடப்பட்ட விளம்பரங்களில், ‘வசனம்: மாறன்’ என்று சேர்த்து வெளியிட்டார் அப்பச்சி. அதிலும் ஒரு சிக்கல் இருந்தது. அப்போது நிறைய மாறன்கள் இருந்தனர். எனவே மூன்றாவது வாரத்தில் ‘முரசொலி’ என்ற அடைமொழியைச் சேர்த்து ‘முரசொலி மாறன்’ என்று விளம்பரங்கள் வெளியாயின. இதனை முரசொலி மாறனே ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அப்பச்சி அன்று சேர்த்த முரசொலி என்ற வார்த்தை மாறன் பெயரோடு, அவரது இறுதி காலம் வரை இணைந்திருந்தது.

வெற்றிக்கு  காரணமான சந்திரபாபு

சகோதரி திரைப்படத்தைப் பொறுத்தவரை, குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் உள்ளது. அந்தப் படத்தில் சந்திரபாபு ஏற்றிருந்த கதாபாத்திரம் ஆரம்பத்தில் கிடையாது. பாலாஜி, பிரேம்நசீர், முத்துராமன் மற்றும் பலரது நடிப்பில், ‘சகோதரி’ திரைப்படம் முடிக்கப்பட்டு விட்டது. படப்பிடிப்பு முடிந்து முழுப்படத்தையும் போட்டுப் பார்த்தபோது, அது முழுக்க முழுக்க எமோஷனல் படமாக வந்திருந்தது. படத்தை சரிகட்ட நகைச்சுவை தேவைப்பட்டது. அதற்காகத்தான் சந்திரபாபுவை போட்டோம். அவர் நடித்த பால்காரன் கதாபாத்திரம் கூட, அப்பச்சியின் யோசனைதான்.

கதாபாத்திரத்தை உணர்ந்து, அதற்கு உயிர் கொடுத்திருந்தார் சந்திரபாபு. படத்தில் கண்ணதாசனின் வரிகளில், சந்திரபாபு பாடிய ‘நான் ஒரு முட்டாளுங்க’ என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்தப் பாடலை அவர் பாடிய விதமும், முகத்தில் காட்டிய பாவனைகளும், சேட்டைகளும் அந்தக் காட்சிக்கு மகுடம் சூட்டுவதாக அமைந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ‘சகோதரி’ படத்தை தோல்வியில் இருந்து காப்பாற்றியது சந்திரபாபுவின் நகைச்சுவைதான்.

மூலக்கதை