தொடரும் சிங்கள அடக்குமுறை ஈழத்தமிழ்மண்ணில் அழிந்துபோகட்டும். துயர்பகிர்வில் ரவிகரன் தெரிவிப்பு

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தொடரும் சிங்கள அடக்குமுறை ஈழத்தமிழ்மண்ணில் அழிந்துபோகட்டும். துயர்பகிர்வில் ரவிகரன் தெரிவிப்பு

தொடரும் சிங்களத்துவ அடக்குமுறை ஈழத்தமிழ்மண்ணில் அழிந்துபோகவேண்டும் எனவும் கண்ணீருற்றிருக்கும் இருமாணவர்களதுகுடும்பத்தாரின் துயரோடு இணைந்துகொள்வதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,

பொலிசாரால் தனித்தே கூறப்படும் அம்மாணவர் மீதான குற்றச்சாட்டுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. வடக்கிலே அமைதியின்மையை தமிழர்கள் ஏற்படுத்தவில்லை. வடக்கிலே சிங்களாதிக்கம் எப்போது வந்ததோ அப்போதிருந்து தான் குழப்பங்களும் அமைதியின்மையும் வந்துள்ளன.தொடர்கின்றன.

ஈழத்தமிழர் மீது அனைத்துவழிகளிலும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையிலும் அவற்றையும் தாண்டி பல்கலைக்கழத்திற்கும் தெரிவுற்ற மாணவர்கள் இவர்கள்.

அதிலும் ஒருவர் ஊடகத்துறை மற்றொருவர் அரசறிவியல் துறை மாணவரும் என்றறிகின்றபோது இவ்விருமாணவர்களும் வீழ்ந்திருக்கும் எம்மண்ணை மீளநிமிர்த்தவல்ல துறைகளிலேயே கல்விகற்றிருக்கிறார்கள்.

இன்று நாம் எம்மண்மை மீட்டெடுக்கவல்ல இரண்டு மாணவர்களை இழந்திருக்கிறோம். தான்தோன்றித்தனமாக இலங்கை பொலிசாரால் இரு மாணவர்கள் கொலைசெய்யப்பட்டமையை தமிழர் மீதான சிங்களத்துவ அடக்குமுறையின் வெறுக்கத்தகு வெளிப்பாடாகவே நோக்குகிறேன்.

காவற்றுறை அதிகாரத்தை தமிழர்களிடம் வழங்காமல் இருப்பது எஞ்சிய தமிழர்வளங்களையும் அழிப்பதற்கா? தமிழர் மீது தொடரப்படும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு கட்டமாகவே இம்மாணவர்கள்-மண்ணின் இளைஞர்கள் கொல்லப்பட்டமையையும் நோக்கமுடிகிறது.

மாணவர்கள், விசயகுமார் சுலக்சன் மற்றும் நடராசா கயன் ஆகியோரது இல்லத்தாரதும் அவர்களோடு துணையுறும் அனைவரின் துயரோடும் இணைந்துகொள்கிறேன். சிங்களப்பேரினவாதியரின் இத்தகைய அடக்குமுறையும் அடக்குமுறை மனப்பான்மையும் ஈழமண்ணில் அழிந்துபோகட்டும்

மூலக்கதை