ரஜினியின் 2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரஜினியின் 2.ஓவை இந்தியில் வெளியிடுகிறார் கரண் ஜோஹர்?

எந்திரன், பாகுபலி போன்ற படங்களை மார்க்கெட் செய்வது, உலகளவில் அதிக அரங்குகளில் வெளியிடுவது ஒரு பிரச்சினை அல்ல. காரணம், அந்தப் படங்களின் கதைப் பின்னணி உலகளாவியது. எந்த மொழி மக்களாலும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளக் கூடியது.

ஆனால் கபாலி? பக்காவாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பேசிய படம் அது. அந்தப் படத்தை தமிழில் அதிக அரங்குகளில் வெளியிடலாம். ஆனால் கிட்டத்தட்ட அதே அளவுக்கு, தெலுங்கு மற்றும் இந்தியிலும் வெளியிட்டார் கலைப்புலி தாணு.

கபாலியின் இந்திப் பதிப்பை ஃபாக்ஸ் ஸ்டார் மூலம் சொந்தமாகவே ரிலீஸ் செய்த தாணு, பெரும் வசூலை ஈட்டினார். இதுவரை எந்த தென்னிந்தியப் படமும்- பாகுபலி உள்பட - செய்யாத வசூல் அது.

இப்போது ரஜினியின் 2.ஓ படத்தை ஒரு நேரடி இந்திப் படத்தைப் போலவே அதிக அரங்குகளில் திரையிட முடிவு செய்துள்ளனர். ரஜினியுடன் அக்ஷய் குமாரும் இணைந்திருப்பதால், குறைந்தது 3000 அரங்குகளிலாவது வட இந்தியாவில் 2.ஓ வெளியாகும் எனத் தெரிகிறது.

இந்தப் படத்தை இந்தியில் வெளியிடப் போகிறவர் யார் தெரியுமா? பாகுபலியை வெளியிட்ட முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர என்கிறார்கள்.

இந்தி மார்க்கெட்டில் படத்தை பெரிய அளவில் புரமோட் பண்ண வேண்டும் என்பதற்காகவே படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை மும்பையில் வெளியிடுகிறது லைகா நிறுவனம். அன்றைய தினம் பாலிவுட்டின் பெருந்தலைகள் அனைத்துமே இந்த நிகழ்ச்சிக்கு திரளப் போவதாக லைகா தரப்பில் கூறப்படுகிறது.

மூலக்கதை