புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
புதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு

இலங்கையில் பிறந்த விபுலாநந்த அடிகளார் யாழ்நூல் என்ற நூலை எழுதி உலக அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை இராமகிருஷ்ண மடத்தில் துறவியாக இணைந்து, அந்த மடத்தின் பணிகளை இலங்கையில் கவனித்தவர். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் உறவுப் பாலம் அமைத்த இவரின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக்கும் முயற்சியில் மு.இளங்கோவன் ஈடுபட்டுள்ளார். விபுலாநந்த அடிகளாரின் கடிதங்கள், கையெழுத்துச் சுவடிகள், நூல்கள், புகைப்படங்கள், நேர்காணல்கள் ஆகியவற்றின் துணையுடன் இந்த ஆவணப்படம் உருவாக உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் தொடக்க விழா புதுச்சேரியில் 06.10.2016 வியாழன் மாலையில் நடைபெற்றது. புதுச்சேரி காமராசர் சாலையில் உள்ள ஜெயராம் ஓட்டலில் நடைபெற்ற ஆவணப்படத்தின் தொடக்க விழாவில் புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் இரா. கமலக்கண்ணன் ஆவணப்படத்தைத் தொடங்கிவைத்தார். சட்டப்பேரவையின் துணைத்தலைவர் வே.பொ. சிவக்கொழுந்து. திருக்குறள் தமிழ் - ஆங்கிலப் பதிப்பினையும், இணையம் கற்போம் என்ற நூலினையும் வெளியிட்டார். தில்லித் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் கி.வா.க. பெருமாள் நூலின் முதல்படிகளைப் பெற்றுக்கொண்டார்.

கனடாவைச் சேர்ந்த சிவம் வேலுப்பிள்ளை சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

ஆய்வறிஞர் கு. சிவமணி, புதுவைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. இளமதி சானகிராமன், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஒப்பிலா. மதிவாணன்,  அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் அரங்க பாரி, வாணியம்பாடி இசுலாமியாக் கல்லூரியின் பேராசிரியர் ப. சிவராஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி.முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புலவர் இ. திருநாவலன், புதுவை மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முனைவர் அரங்க.மு. முருகையன் வரவேற்புரையாற்றவும், மு.இளங்கோவன் ஏற்புரையாற்றவும், பேராசிரியர் உரு. அசோகன் நன்றியுரையாற்றினர். நிகழ்ச்சியைப் பேராசிரியர் மா. சுஜாதா தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் புதுச்சேரி, தமிழகத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மிகுதியாகக் கலந்துகொண்டனர்.

மூலக்கதை