ராகுல் ஏன் வந்தார்?

தமிழ்நியூஸ்நெற்  தமிழ்நியூஸ்நெற்
ராகுல் ஏன் வந்தார்?

‘மரியாதை நிமித்தமான சந்திப்பு…’ இந்த மூன்று வார்த்தைகளுக்குள், எத்தனை… எத்தனை… திட்டங்கள், நம்பிக்கைகள், மர்மங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதை இந்திய அரசியல் நன்றாக அறியும். கடந்த ஒரு நூற்றாண்டில், இந்திய அரசியலின், நிறம் மாறிய நிகழ்வுகள் அனைத்தும், இந்த மூன்று வார்த்தைகளில் இருந்து பிறந்தவைதான். ராகுல்காந்தியின் அப்போலோ வருகைக்குப் பின்னும், ‘மரியாதை நிமித்தமான சந்திப்பு…” என்ற வார்த்தைகளே வந்து விழுந்துள்ளன. இவையும், இனிவரும் தமிழகத்தில்… ஏன் இந்திய அளவில்கூட, அரசியல் அதிர்வுகளை உண்டாக்கலாம்.

மரியாதை நிமித்தமா? அரசியல் நிமித்தமா?

டெல்லியில் இருந்து, தனி விமானத்தில் கிளம்பி, இந்தியாவின் கடைக்கோடி மாநிலம்வரை வந்து, அதன் முதலமைச்சரை… அதுவும், தங்களுக்கு எதிர் அணியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவரை… மரியாதை நிமித்தமாக உடல்நலம் விசாரித்துச் சென்றுள்ளார் ராகுல் காந்தி. ஆனால், இதே தமிழகத்தில், அப்போலோவில் இருந்து அரை கி.மீ. தொலைவில் இருக்கும்… அதுவும் தங்கள் கூட்டணியிலேயே இன்றுவரை இருக்கும், மூத்த அரசியல்வாதி கருணாநிதியை, மரியாதை நிமித்தமாகப் போய்ச் சந்திக்கவில்லை. காரணம், உண்மையில், ராகுலின் வருகை என்பது மரியாதை நிமித்தமானது அல்ல… அரசியல் நிமித்தமானதே!

நிறம் மாறுமா தமிழகம்?

இந்திய அரசியல் விசித்திரமானது. அதில், தமிழக அரசியல் இன்னும் விநோதமானது. அப்போலோ மருத்துவமனையை மையமாக வைத்து, அது இப்போது தனது புதிய நிறமாற்றத்தைத் தொடங்கி உள்ளது போலதெரிகிறது. தமிழகத்தின் மிகப்பெரிய அரசியல் கட்சி அ.தி.மு.க. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களுடனும் 41 சதவிகித வாக்கு வங்கியுடனும் முதலிடத்தில் இருப்பது அ.தி.மு.க-தான். அந்த மாபெரும் அரசியல் கட்சியின் ஒரே தலைவி… ஒரே ஆளுமை… நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும்தான். அவருக்கு ஏற்பட்டுள்ள உடல்நலக் குறைவு, அ.தி.மு.க என்ற மிகப்பெரிய கட்சியிலும் தமிழக அரசியலிலும் மாபெரும் வெற்றிடத்தை உருவாக்கும் என்று கணக்குப்போடுகின்றன தேசிய சக்திகள். அந்த வெற்றிடத்தில், தங்களை இட்டு நிரப்பிக் கொள்ள அவர்களுக்குள் பலத்த போட்டா போட்டி நடக்கிறது. அதன் எதிரொலிதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் அறிவிப்பு; தமிழக அ.தி.மு.க எம்.பி-களை பிரதமர் மோடி சந்திக்க மறுத்தது; எய்ம்ஸ் டாக்டர்கள் திடீரென அப்போலோவுக்கு வந்தது; ராகுல் காந்தி ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிக்க அப்போலோவுக்கு வந்தது; அதோடு, தங்கள் கூட்டணியில் இருக்கும் மூத்த தலைவர் கருணாநிதியை ராகுல் சந்திக்காமல் திரும்பியது; தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்று சுப்பிரமணியசாமி ட்விட்டரில் பதிவு செய்தது என்பன எல்லாம்.

ராகுலின் வருகை திடீரென திட்டமிடப்பட்டதா?

ராகுலின் வருகை வேண்டுமானால், திடீரென்று நடந்ததாக இருக்கலாம். ஆனால், அதற்கான திட்டங்கள், திடீரென ஒரு காலைப்பொழுதில் உருவானது அல்ல. திருநாவுக்கரசரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவராக நியமித்தபோதே அது தொடங்கிவிட்டது. ஆனால், அப்போது காங்கிரஸுக்கு இருந்த காரணம் வேறு; இப்போது காங்கிரஸுக்கு இருக்கும் காரணம் வேறு. ஆனால், நோக்கம் ஒன்றுதான்.

உச்ச நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு இருக்கிறது. அதில், ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், அ.தி.மு.க-வில் குழப்பம் உருவாக வாய்ப்பு உண்டு. அதைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் திட்டமிட்டது. அதைச் செயல்படுத்துவதற்காகவே கொண்டுவரப்பட்டவர்தான் திருநாவுக்கரசர். ஏனென்றால், திருநாவுக்கரசர் மற்ற காங்கிரஸ்காரர்களைப் போல அல்ல; அவருக்கு திராவிடக் கட்சிகளின் நெளிவு சுளிவுகள் அத்துப்படி; அந்தக் கட்சிகளுக்குள் யாரைப் பிடித்து, யாரை வீழ்த்தலாம் என்பது அவருக்குத் தெரியும். அதனால், சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு தேதி நெருங்கும் நேரத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவராக திருநாவுக்கரசரை கொண்டுவந்தது காங்கிரஸ். காங்கிரஸின் டெல்லித் தலைமைக்கு இந்த யோசனையைச் சொன்னவர் சாட்சாத் ப.சிதம்பரம் தான் என்கின்றன டெல்லி வட்டாரங்கள். பி.ஜே.பி-க்கும் இதே கனவு நீண்ட நாட்களாக இருக்கிறது. இந்த நேரத்தில்தான், ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். ஜெயலலிதாவின் உடல்நிலை விபரங்களை அறிந்து கொள்வதில், அ.தி.மு.க-வினரைவிட அதிக ஆர்வம் காட்டின காங்கிரஸும், பி.ஜே.பி.யும். அவர்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், அந்தக் கட்சிகள் தங்களின் வியூகங்களை மாற்றிக் கொண்டுள்ளன.

ஜெயலலிதா உடல்நிலையும் பி.ஜே.பியின் அரசியலும்….

ஜெயலலிதா உடல்நிலை விபரங்களை, உளவுத்துறை மூலம் பி.ஜே.பி லேசாக தெரிந்து கொண்டது; அதிகாரிகள் மூலம் கொஞ்சம் கூடுதலாக அறிந்து கொண்டது; அப்போலோ பிரதாப் ரெட்டியிடம் அறிக்கையும் வாங்கியது; அதன் பின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை அனுப்பி அவற்றை உறுதி செய்யப்பார்த்தது. தமிழக ஆளுநர் வித்யாசாகர்ராவ் மூலம் அனைத்தையும் உறுதிப்படுத்தியது. அவர் மத்திய அரசுக்கு கொடுத்த அறிக்கையில் இருந்து பி.ஜே.பி தெளிவு பெற்றது. ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய கூடுதல் விபரங்கள், தமிழகத்தைவிட டெல்லிக்குத் துல்லியமாகப் போனது.

அதன்பிறகுதான், வேகவேகமாக பி.ஜே.பி காய் நகர்த்தியது. “தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தண்ணீர் குடிக்க முடியாது…” என்பதை பி.ஜே.பி உணர்ந்து கொண்டது. ஆனால், கர்நாடகாவில் அது சாத்தியம். எனவே, இப்போதைக்கு தமிழகமா? கர்நாடகமா? என்றால், கர்நாடகம்தான் முக்கியம் என்று அதன்பிறகுதான் முடிவெடுத்தது. அந்த முடிவை எதிர்க்கும் நிலையில், ஜெயலலிதா இல்லை என்பது அவர்களுக்கு கூடுதல் தெம்பு. அதன்பிறகுதான், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கமாட்டோம் என்று மத்தியில் ஆளும் பி.ஜே.பி அறிவித்தது.

ஜெயலலிதா ஆரோக்கியமாக இருக்கிறார் என்று கவர்னர் அறிக்கை கொடுத்திருந்தால், “காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று முகத்தில் அறைந்ததுபோல், மத்திய பி.ஜே.பி அரசு அறிவித்து இருக்காது. ஏனென்றால், நாடாளுமன்றத்தில் 47 எம்.பி-க்களை வைத்திருக்கும் ஜெயலலிதா, டெல்லியை உலுக்கி எடுத்துவிடுவார் என்பது மோடிக்குத் தெரியும். அதுபோல, தன்னை சந்திக்க வந்த அ.தி.மு.க எம்.பி-க்கள் ஜெயலலிதாவின் நேரடி உத்தரவின் பேரில் தன்னைச் சந்திக்க வரவில்லை என்பதும் மோடிக்குத் தெளிவாகத் தெரியும். அதனால் தான் அவர்களைச் சந்திக்கவில்லை. ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில் வைத்து, அரசியல் கணக்குப்போட்டால், “இப்போதைக்கு தமிழகத்தை வஞ்சிக்கலாம்; கர்நாடகத்தை அரவணைக்கலாம்” என்பதுதான் பி.ஜே.பி-யின் அரசியல். பி.ஜே.பி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை, அ.தி.மு.க உணர்ந்தே உள்ளது. அ.தி.மு.க எம்.பியும், மாநிலங்களை துணை சபாநாயகர் தம்பித்துரை மூலம், அ.தி.மு.க-வின் அதிருப்தி டெல்லியில் ஒலித்தது. அதை மோப்பம் பிடித்த காங்கிரஸ் தனக்குச் சாதகமான திசையில் காய்களை நகர்த்தத் தொடங்கியது.

ஜெயலலிதா உடல்நிலையும் காங்கிரஸ் அரசியலும்…

கவர்னர் வித்யாசாகர் ராவ் அறிக்கையின் விபரங்கள், நேற்று நாடாளுமன்றத்துக்கு வந்த மோடியின் கைகளுக்கு அதிகாரப்பூர்வமாக சென்றது. அதேநேரத்தில், காலம்காலமாக டெல்லியில் இருந்து இந்தியாவின் அரசியல் வழியைத் தீர்மானிக்கும் காங்கிரஸுக்கு அதிகாரமற்ற வழிகளின் மூலம் போனது.

அப்போலோவுக்கு வந்த எய்ம்ஸ் டாக்டர்களில், இதயநோய் சிறப்பு மருத்துவர் நிதிஷ் நாயக், மன்மோகன் சிங்கின் ஆஸ்தான மருத்துவர் என்பது கவனிக்கத்தக்கது. ஆக, எந்தளவுக்குத் துல்லியமாக, பி.ஜே.பி-க்கு ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றித் தெரியுமோ… அதே அளவு துல்லியமாக, காங்கிரஸ் தலைமைக்கும் தெரியும். அதோடு, பி.ஜே.பி – அ.தி.மு.க-வின் ரகசிய உறவில் விரிசல் விழுந்துள்ளது என்பதும் காங்கிரஸுக்கு தெரியும். இதைப் பயன்படுத்தி, தமிழகத்தில் கொஞ்சம் இறங்கி விளையாடலாம் என்று முடிவெடுத்துத்தான் களத்தித்திற்கு வந்துள்ளது காங்கிரஸ். அந்த விளையாட்டில் முதல் காய் நகர்த்தல்தான் ராகுலின் விசிட்.

இப்போதே அ.தி.மு.க-வுடன் ஒட்டிக் கொண்டால், எதிர்காலத்தில், தமிழக காங்கிரஸூக்கு அ.தி.மு.க முகமூடியை மாட்டலாம்; அதன்மூலம், தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற ஒரு வாய்ப்புத் தேடலாம்; அதிர்ஷ்டம் இருப்பின், ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு, அ.தி.மு.க-வை காங்கிரஸில் கரைக்கலாம் என்றுகூட திட்டம் வைத்துள்ளது. இதில் எது நடந்தாலும், நடக்கவில்லை என்றாலும், உள்ளாட்சித் தேர்தலுக்காவது, இந்த ‘மூவ்’ பயன்படலாம் என்று நினைக்கிறது காங்கிரஸ். ஏனென்றால், ஜெயலலிதாவின் உடல்நிலை ஏற்படுத்தி உள்ள அனுதாபம், மாநிலத்தில் ஆளும் கட்சி அந்தஸ்து என்பதெல்லாம், அ.தி.மு.க அணிக்கு சாதகம். அந்த அணியில் இருப்பதே காங்கிரஸுக்கும் சாதகம் என்ற கணக்கு தான் அதற்குக் காரணம். இதையெல்லாம் ஒட்ட வைத்துத்தான், ராகுலின் வருகையைப் புரிந்துகொள்ள வேண்டும். ராகுல் அப்போலோ போனதை விட, கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் போகாததில் புரிந்துகொள்ள இன்னும் நிறைய அரசியல் இருக்கிறது.

டெல்லி காங்கிரஸ் தலைமையின் தற்போதைய சபதம், “அ.தி.மு.க லட்சியம்… உள்ளாட்சி நிச்சயம்…”

மூலக்கதை