மதுரை கீழடியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களுக்கு அருங்காட்சியகம் அமைத்திடுக: கருணாநிதி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மதுரை கீழடியில் அகழாய்வில் கிடைத்த பொருட்களுக்கு அருங்காட்சியகம் அமைத்திடுக: கருணாநிதி

சென்னை: மதுரை கீழடியில் அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

மதுரை கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட பொருள்களை எல்லாம் மைசூருக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாமே?

கடந்த இரண்டாண்டு காலத்திற்கு மேலாக வைகைக் கரை கீழடி கிராமத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் அழிந்துபோன ஒரு பெரும் நகரம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள கட்டடங்களும், கிடைத்திருக்கும் பழங்காலப் பொருள்களும் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை இங்கு வாழ்விடங்கள் இருந்ததற்கான சான்றுகளாக உள்ளன.

கட்டடங்கள் சதுரம், செவ்வகம், நீள் சதுர வடிவங்களில் உள்ளன. கட்டடங்கள் தெற்கு வடக்காகக் கட்டப்பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கருப்பு - சிகப்பு நிறத்திலான மண் பானைகள் கிடைத்துள்ளன. சுடு செங்கற்களால் உற்பத்தி செய்யப்பட்ட தட்டுகள், குவளைகள் கிடைத்துள் ளன. தந்தம், செம்பு, இரும்பு ஆகியவை பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அகழ்வாய்வில் மொத்தம் 5,300 பொருள்கள் இதுவரை கிடைத்துள்ளன.

இதன் மூலம் சங்க காலத் தமிழகம் நகர்ப்புற நாகரீகத்தைக் கொண்டதல்ல என்ற கருத்துத் தவறானது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வாய்வில் கிடைத்த தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகளும் மற்றும் தொல்பொருட்களும் தமிழர் நாகரீகத்தின் தொன்மையைப் பறை சாற்றுகின்றன. சிந்து சமவெளி நாகரிகத்தைப் போல் இங்கும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற் கான தடயங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன. இதுவரை தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கீழடியில் நடைபெற்றிருக்கும் ஆய்வுதான் மிகச் சிறப்பானது. புதிய தமிழ்ச் சொற்களும் இங்குதான் கிடைத்துள்ளன.

கீழடியில் கிடைக்கப் பெற்ற அரிய பொருட் களை பாதுகாத்து வைக்கக்கள அருங்காட்சியகம் ஒன்றை உருவாக்க மத்திய தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் ஆயிரக்கணக்கான அரும் பெரும் தொல்பொருட்கள் மைசூருக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கிடங்கில் போட்டு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஹாரப்பாவை ஒத்த தமிழர் நாகரிகத்திற்கான கீழடி சான்றுகளை உடனடியாகக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் தவறினால், அவை முடங்கிப் போகும் பேராபத்து உருவாகும். எனவே தமிழக அரசு மிகுந்த விழிப்புணர்ச்சியோடு, கீழடி கிராமத்திலேயே இடம் ஒதுக்கித் தொல்பொருள்களுக்கான கள அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்திட ஆர்வத்தோடு முன்வர வேண்டும் என்றும்; அதற்கான அறிவிப்பினை செய்து, தமிழர் நாகரிகத்திற்கான வரலாற்றுக் கடமையினைச் செம்மையாக ஆற்றிட வேண்டுமென்றும்; தமிழார்வலர்களின் விருப்பத்தைப் பிரதிபலித்து வலியுறுத்துகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலக்கதை