பஞ்சாப்பில் எல்லையோர மக்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு

தினத்தந்தி  தினத்தந்தி
பஞ்சாப்பில் எல்லையோர மக்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவு


புதுடெல்லி,
பஞ்சாப்பில் எல்லையோர மக்களை வெளியேற்ற மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. 
ஜம்மு - காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டி அமைந்துள்ள பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நள்ளிரவு இந்திய ரானுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. எல்லை முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. எல்லையில் அனைத்து படைப்பிரிவுகளும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் எல்லையிலிருந்து 10 கிலோ மீட்டர் வரையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை உடனடியாக வெளியேற்றுமாறு பஞ்சாப் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பிரகாஷ் சிங் பாதலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சர்வதேச எல்லையிலிருந்து 10 கி.மீ. தொலைவு வரையில் உள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு கேட்டுக் கொண்டார். 
இதற்கிடையே அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடி மரியாதை ரத்துசெய்யப்பட்டது. எல்லையில் பள்ளிகள் மூடப்பட்டது. மருத்துவமனைகள் காலி செய்யப்படுகிறது. அடுத்தகட்ட உத்தரவு வரும் வரையில் இந்நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டது.
ராஜ்நாத் சிங்குடன் பேசிய பிரகாஷ் சிங் பாதல், பஞ்சாப் மாநில தலைமைச் செயலாளர், முதல்வரின் முதன்மை செயலாளர், காவல் துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும் அமைச்சரவையைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். 
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் பேசுகையில், “பெரோஸ்பூர், பஸிலிகா, அமிர்தசரஸ், தரன் தர்ன், குர்தாஸ்பூர் மற்றும் பதான்கோட் ஆகிய 6 மாவட்டங்கள் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. இந்த மாவட்டங்களில் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராம மக்களை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர், காவல் துறை தலைவருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறிஉள்ளார். மேலும், வெளியேற்றப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கான இடத்தை அடையாளம் கண்டு, மக்கள் பாதுகாப்பாக சிரமம் இல்லாமல் தங்குவதற்காக தற்காலிக முகாம்களை அமைக்கவும் அதிகாரிகளுக்கு பாதல் உத்தரவிட்டார்.
இந்தப் பணிகளை கண்காணிக்குமாறு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிகளை மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. உடனடியாக தேவைகளை பூர்த்தி செய்ய காவல்துறைக்கு தேவையான நிதிஉதவியை உடனடியாக அளிக்கவும் தலைமைச் செயலாளருக்கு பாதல் உத்தரவிட்டு உள்ளார். மக்களை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது, எல்லையில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மூலக்கதை