எல்லையில் அனைத்து படை பிரிவுகளையும் அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தியது பிஎஸ்எப்

தினத்தந்தி  தினத்தந்தி
எல்லையில் அனைத்து படை பிரிவுகளையும் அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தியது பிஎஸ்எப்


புதுடெல்லி,
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை அனைத்து படை பிரிவுகளையும் அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தி உள்ளது.
உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்ததை அடுத்து,இனியும் பொறுமை காத்து பலன் இல்லை என்ற நிலையில், எல்லையில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு ராணுவ நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 
அதன்படி எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது. 
எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் பாகிஸ்தான் பகுதியில், 2 கி.மீ., தொலைவுக்குள் அமைந்துள்ள பிம்பர், ஹாட்ஸ்பிரிங், கெல் மற்றும் லிபா செக்டார்களில் இந்த துல்லிய தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவை நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கின. அதிகாலை 4.30 மணிக்கு முடிவுக்கு வந்தன. இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் 7 முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. 
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்த பாகிஸ்தான் படையினர் 2 பேரும் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன.
எல்லைப் பாதுகாப்பு படை அதிஉஷார்
இந்திய ராணுவத்தின் நடவடிக்கையை அடுத்து எல்லையில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து சர்வதேச எல்லையில் அனைத்து படைபிரிவுகளையும் எல்லைப் பாதுகாப்பு படை அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்திஉள்ளது.
இந்திய எல்லைப் பாதுகாப்பு படை, ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் சர்வதேச எல்லையில் தன்னுடைய படைப்பிரிவுகளை அதிஉயர் உஷார் நிலையில் இருக்க உத்தரவு பிறப்பித்து உள்ளது என்று அதிகாரிகள் கூறிஉள்ளனர். எல்லையில் கண்காணிப்பை அதிகரிக்கவும், எல்லை நிலைகளில் கூடுதல் ராணுவ வீரர்களை படைப்பிரிவில் அமர்த்தவும் உத்தரவிட்டு உள்ளது.  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. அடுத்தகட்ட உத்தரவு வரும்வரையில் அட்டாரி-வாகா எல்லையில் நடைபெறும் கொடி மரியாதை ரத்துசெய்யப்பட்டது. 
எல்லையில் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு எல்லைப் பாதுகாப்பு படை கட்டுப்பாடு விதித்து உள்ளது. 
எல்லையில் கிராம மக்களை வெளியேற்றுவதற்கு உள்ளூர் நிர்வாகத்திற்கு உதவிசெய்யுமாறும் எல்லைப் பாதுகாப்பு படையிடம் கேட்டு கொண்டு உள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் கமாண்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் படைப்பிரிவுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

மூலக்கதை