சகாபுதீன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு: தீர்ப்பினை நாளைக்கு ஒத்தி...

தினத்தந்தி  தினத்தந்தி
சகாபுதீன் ஜாமீனை ரத்து செய்ய கோரி மேல்முறையீடு: தீர்ப்பினை நாளைக்கு ஒத்தி...

புதுடெல்லி,

ராஷ்டீரிய ஜனதா தளத்தின் சர்ச்சைக்குரிய தலைவர் சகாபுதீனுக்கு கொலை வழக்கு ஒன்றில் ஜாமீன் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த மனு மீது நடந்த விசாரணையில் தனது தீர்ப்பினை சுப்ரீம் கோர்ட்டு நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.  பீகாரின் சிவான் பகுதியை சேர்ந்தவர் சந்திரகேஷ்வர் பிரசாத்.  இவரது 3 மகன்கள் கடத்தப்பட்டு பின்னர் 2 தனித்தனி சம்பவங்களில் கொலை செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபரான சகாபுதீனுக்கு பாட்னா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.  இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இதன் மீது நீதிபதிகள் பி.சி. கோஸ் மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை மேற்கொண்டனர்.  இதில் சகாபுதீன் மற்றும் பிறரது வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

சகாபுதீனுக்காக ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாபடே, வழக்கம் ஆன சூழலில் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமை மறுக்கப்பட கூடாது என ஜாமீன் எதிர்ப்பு மேல்முறையீட்டிற்கு எதிராக கூறினார்.  இதேநிலையில், பிரசாத்திற்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், சகாபுதீனை ஜாமீனில் விடுவிப்பது நீதியை அவமதிக்கும் செயல் என கூறி அதனை ரத்து செய்ய வேண்டும் என கோரினார்.

சகாபுதீனை ஊடகங்கள் பின்தொடர்ந்து அவரை துன்புறுத்துகிறது என கூறிய நாபடே, மாநில அரசு முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் தனிநபரின் சுதந்திரத்தில் விளையாட கூடாது என்றும் கூறினார்.

இந்நிலையில், விசாரணையை மேற்கொண்ட நீதிபதிகள் அமர்வு தீர்ப்பினை நாளைக்கு ஒத்தி வைத்துள்ளது.

நிதீஷ் தலைமையிலான அரசு பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது.  இந்நிலையில் சகாபுதீனுக்கு எதிரான வழக்கினை தொடர்வதில் அரசு தீவிரம் காட்டாததற்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று கண்டனம் தெரிவித்திருந்தது.

நீதிபதிகள் நேற்று, உண்மை விவரங்களை நீதிமன்றத்தில் வழங்காமல் இருந்தது பற்றி கேள்வி எழுப்பி பீகார் அரசினை கடுமையாக சாடி இருந்தனர்.  சகாபுதீனுக்கு ஜாமீன் வழங்கும்வரை நீங்கள் தூங்கி கொண்டு இருந்தீர்களா? என்றும் அவர்கள் கடுமையாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

மூலக்கதை