தீவிரவாதம் இன்னும் ஒழியவில்லை – மஹிந்த சமரசிங்க

TAMIL 24 NEWS  TAMIL 24 NEWS
தீவிரவாதம் இன்னும் ஒழியவில்லை – மஹிந்த சமரசிங்க

யுத்தம் நிறைவடைந்த போதிலும், மூன்று சமூகத்தவர்கள் மத்தியிலும் தீவரவாத கொள்கையுடையவர்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டே இருப்பதாக, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது, அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘இந்த நாட்டிலே தீவரவாத கட்சிகள் இருக்கின்றது என சகலருக்கும் தெரியும். தீவிரவாத முன்னெடுப்புக்களை மேற்கொண்டு அரசியல் நடத்தும் சில பிரிவினரும் இங்கு உள்ளனர்.

இது ஒரு தரப்பினருக்கு மாத்திரமானது அல்ல. இலங்கையில் சிங்கள, முஸ்லிம், தமிழ் தீவிரவாத கொள்கையுடையவர்கள் இருக்கின்றார்கள். ஜனநாயக நாட்டில் இருக்கும் பொதுவான சில விடயங்களில் இதுவும் ஒன்றாகும். எனினும் பெரும்பான்மை இருப்பது அந்த இடத்தில் அல்ல. நாம் பெரும்பான்மையினை கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனாதிபதி தேர்தலின் போது அவதானித்தோம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்திலும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்காமல், தீவிரவாத கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கட்சிக்கு ஆதரவு வழங்கினார். எனினும் அவர்களில் ஒருவர் கூட நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை. இதிலிருந்து மக்கள் இனவாத, தீவிரவாத கொள்கையுடையவர்களை நிராரிக்கின்றமை நன்கு தெரிகின்றது.

அதுமாத்திரமல்லால் கூட்டமைப்பின் பெரும்பான்மையான தலைவர்கள் விக்னேஸ்வரனின் கருத்து கூட்டமைப்பின் கருத்து அல்ல என்றும், அவரின் கருத்தினை நிராகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் நாம் தேவையற்ற வகையில் குழப்பமடையத் தேவையில்லை. ஏனெனில் சகல மக்களிடையேயும் இனவாத, தீவிரவாதக் கொள்கையுடையவர்கள் இருக்கின்றார்கள்.

தீவிரவாத கொள்கையுடடையவர்கள் அணிதிரண்டு வடக்கில் செயற்படுவதைப் போன்று, தெற்கிலும் சிலர் செயற்படுகின்றனர்.’ என்றும் கூறினார்.

 

மூலக்கதை