ரூ.30 ஆயிரம் கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி

தினமலர்  தினமலர்
ரூ.30 ஆயிரம் கோடிக்கு இறால் மீன் ஏற்றுமதி

ராமநாதபுரம்: இறால் மீன் வளர்ப்பில் இந்தியாவுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைப்பதாக கருத்தரங்கில் விஞ்ஞானி தெரிவித்தார். மத்திய உவர் நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தட்பவெப்ப நிலை மாறுதல்களும், இறால் வளர்ப்பு மேலாண்மையும் குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடந்தது.
ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி டாக்டர் குமரன் பேசியதாவது: உலக அளவில் இறால் மீன் உற்பத்தி யில் இந்தியா இரண்டாம் இடம் பெற்று உள்ளது. சீனா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் கடந்த 2010ம் ஆண்டில் ஒரு லட்சம் எக்டேரில் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் டன் டைகர் இறால் மீன் உற்பத்தி செய்யப்பட்டது. அதன் பிறகு அதிக உற்பத்தி திறன் கொண்ட 'வெண்மை' இறால் மீன் அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டுகளில் இறால் மீன் உற்பத்தி நான்கு மடங்காக அதிகரித்தது.
இந்தியாவில் ஒரு லட்சம் எக்டேராக இருந்த இறால் வளர்ப்பு பரப்பளவு தற்போது 2 லட்சம் எக்டேராக அதிகரித்துள்ளதால் இறால் மீன் உற்பத்தியும் 4.15 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இவற்றில் 90 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு கடந்த ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி கிடைத்துள்ளது.இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் அதிகளவு இறால் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 7,000 எக்டேரில் 22 ஆயிரம் டன் இறால் மீன் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை